குளிர் காலத்தில் நம்மை தாக்க தயாராக இருக்கும் உடல்நலப் பிரச்சினைகள்… எச்சரிக்கையா இருக்க என்ன செய்யணும்!!!

Author: Hemalatha Ramkumar
11 November 2024, 2:48 pm

குளிர்காலத்தில் நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். வானிலை குளுமையாகவும், வறண்ட நிலையில் இருப்பதாலும் நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவிழந்து அதனால் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்த மாதிரியான சூழல் வைரஸ்கள் பரவுவதற்கு தோதானவை. அதுமட்டுமல்லாமல் குளிர் காலத்தில் சூரிய வெளிச்சத்தில் நம்மை போதுமான அளவு வெளிப்படுத்திக் கொள்வதில்லை. இதனால் வைட்டமின் D குறைபாடு ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இது தவிர வாழ்க்கை முறை மற்றும் உணவு போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் ஒரு சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே இந்த குளிர் காலத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில உடல்நல பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

சளி மற்றும் காய்ச்சல்

குளிர்ந்த மற்றும் வறண்ட காற்றில் பரவும் வைரஸ்கள் காரணமாக நமக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. சூரிய வெளிச்சம் போதுமான அளவு கிடைக்காததால் நோய் எதிர்ப்பு அமைப்பு குறைந்து, சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அவ்வப்போது கைகளை கழுவி சுத்தமாக வையுங்கள். மேலும் கதகதப்பான சூழலில் இருப்பது சளி மற்றும் காய்ச்சலில் இருந்து தப்பிப்பதற்கு உதவும். 

ஆஸ்துமா மற்றும் அலர்ஜி

குளிர்ந்த காற்று ஆஸ்துமா பிரச்சனைகளைத் தூண்டலாம். எனவே ஹியுமிடிஃபையர்கள் பயன்படுத்துவது வாயையும், மூக்கையும் ஸ்கார்ஃப் கொண்டு மூடுவது போன்றவை சுவாசிப்பதை எளிதாக்கும். 

மூட்டு வலி மற்றும் ஆர்த்ரைட்டிஸ் 

குளிர்ந்த வெப்பநிலை தசைகளை இறுக்கி மூட்டுகளில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தும். இது ஆர்த்ரைட்டிஸ் வலியை இன்னும் மோசமாக்கும். எனவே மூட்டுகளை கதகதப்பாக வையுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், வீக்கத்தை குறைப்பதற்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுங்கள். 

இதையும் படிக்கலாமே: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்க வீட்டிலேயே மருதாணி ஹேர் பேக்!!!

வறண்ட சருமம் மற்றும் எக்ஸிமா 

குளிர்ந்த வறண்ட காற்று சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். இதனால் பெரும்பாலும் வறட்சி, அரிப்பு மற்றும் எக்ஸிமா ஏற்படும். ஆகவே தடிமனான மாய்சரைசர்களை உபயோகிப்பது ஹியூமிடிஃபையர் பயன்படுத்துவது மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை பெற்று தரும். 

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் 

குளிர்ந்த வெப்பநிலைகள் ரத்தநாளங்களை குறுக செய்து அதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது இதயம் வேலை செய்வதில் சிக்கலை உண்டாக்கும். இதன் காரணமாக ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதிலும் ஏற்கனவே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். 

சுவாசத் தொற்றுகள் 

வின்டர் சீசனில் பிரான்கைட்டிஸ் மற்றும் நிமோனியா போன்ற சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக வரலாம். குளிர்ந்த வானிலை நம்முடைய சுவாச அமைப்பை வலுவிழக்க செய்து அதில் எளிதாக தொற்று ஏற்பட வழிவகுக்கும். எனவே கதகதப்பாக உங்களை வைத்துக் கொள்ளுங்கள், அதிக கூட்டம் நிறைந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்கவும், அடிக்கடி கைகளை கழுவவும்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!