இதெல்லாம் பண்ணாலே ஹெல்தியான வழியில வெயிட் கெயின் ஆகிடும்!!!
Author: Hemalatha Ramkumar19 September 2024, 4:47 pm
எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கிறீர்களா? உங்கள் உடல் எடையை அதிகரிப்பதற்கான வழிகளை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய மரபணு அமைப்பு அல்லது விரைவான வளர்சிதை மாற்ற விகிதம் போன்ற பல்வேறு காரணங்களால் உங்களுடைய உடல் மெலிந்து காணப்படலாம். உங்கள் உடல் எடை குறைவாக இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிப்பது எவ்வளவு முக்கியமோ, உங்களுடைய உடல் எடையை ஆரோக்கியமான வழியில் அடைவதும் சமமாக முக்கியம். இது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆற்றல் அளவுகளை ஊக்குவித்து உங்களை ஆரோக்கியமாக மாற்றும். அந்த வகையில் உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவும் ஒரு சில குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய கலோரிகளை அதிகரிக்கவும்
உணவில் உங்களுடைய உடல் செலவு செய்யும் கலோரிகளை விட அதிக கலோரிகளை நீங்கள் சாப்பிட வேண்டும். கூடுதலாக 500 முதல் 1000 கிலோ காலோரிகள் வரை நீங்கள் சாப்பிடுவது அவசியம். இதற்கு ஒரு நாளைக்கு 3 பிரதான உணவுகள் மற்றும் குறைந்தபட்சம் 3 ஸ்நாக்ஸ் டைம் போன்றவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்களுடைய அன்றாட உணவில் நட்ஸ், விதைகள், முழு தானியங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடிக்கடி சாப்பிடவும்
உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் நாள் முழுவதும் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ச்சியாக நீங்கள் நாள் முழுவதும் கலோரிகளை எடுத்துக் கொள்ளும் பொழுது உங்களுடைய எடை எளிதாக அதிகரிக்கும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்
உடல் எடையை அதிகரிக்க நீங்கள் ஆசைப்பட்டால் கட்டாயமாக அதனை நீங்கள் ஆரோக்கியமான வழியில் செய்வது அவசியம் மற்றும் உடல் எடை அதிகரிப்பதற்கு முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், மெலிந்த புரதம் போன்ற ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள். இந்த உணவுகளில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் பெரு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் அது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
உடற்பயிற்சி
உடல் எடை அதிகரிப்பு என்பது தசை வளர்ச்சியின் மூலமாக பெறப்படுகிறது. இதற்கு நீங்கள் வலு பயிற்சிகளை செய்யலாம். ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிஃப்ட் போன்றவை நீங்கள் முயற்சி செய்யலாம். ஒரு வாரத்துக்கு 3 முதல் 4 முறை நாட்கள் வலு பயிற்சியில் ஈடுபடுங்கள். இவ்வாறு செய்வது உங்களுடைய தசை வளர்ச்சியை அதிகரிக்கும்.
திரவ கலோரிகளை சேர்க்கவும்
நாள் முழுவதும் நீங்கள் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய வயிற்றில் கனமான உணர்வு இருக்கும். எனவே நீங்கள் உங்களுடைய உணவில் ஸ்மூத்தி, புரோட்டீன் ஷேக், மில்க் ஷேக் போன்ற ஆரோக்கியமான திரவ கலோரிகளை சேர்க்கலாம். ஆனால் இவ்வாறு நீங்கள் சாப்பிடும் பொழுது அதில் சர்க்கரைகளை தவிர்த்து விடவும்.
கலோரி நிறைந்த டாப்பிங்ஸ்
உணவுக்கு கூடுதல் கலோரிகளை சேர்ப்பதற்கு அவற்றில் நட்ஸ், விதைகள், சீஸ், அவகாடோ போன்ற கலோரி அதிகம் உள்ள உணவுகளை டாப்பிங்சாக சேர்க்கலாம். மேலும் அவகாடோ, சீஸ் போன்றவற்றுடன் ஆரோக்கியமான டிப்களை நீங்கள் தயாரிக்கலாம். பிரேசிலியன் நட்ஸ், பாதாம், வால்நட், ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவை உங்களை ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க உதவும்.
போதுமான அளவு ஓய்வு நீங்கள் போதுமான அளவு ஓய்வு எடுக்காவிட்டால் உங்களுடைய உடல் எடை அதிகரிப்பு முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும். ஓய்வு என்பது உங்கள் ஒட்டுமொத்த உடலின் வளர்ச்சியும் மற்றும் தசை தன்னை குணப்படுத்திக் கொள்வதற்கும் அவசியம்.
ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்க்கவும்
ஆரோக்கியமான கொழுப்புகள் கலோரிகளின் முக்கியமான மூலங்கள். மேலும் அவற்றில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உடலின் வளர்ச்சிக்கு ஆதரவு தருகிறது. அவகாடோ, ஆலிவ் எண்ணெய், நட்ஸ், விதைகள் மற்றும் வஞ்சிரம் போன்ற கொழுப்பு மீன்கள் போன்றவை இதில் அடங்கும். இது தவிர இறைச்சி, மீன், முட்டைகள் மற்றும் பீன்ஸ் போன்ற அதிக புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.