எனர்ஜி டிரிங்க்ஸ் ரொம்ப குடிப்பீங்களோ… அப்போ உங்களுக்கு பிரச்சினை கன்ஃபார்ம்!!!
Author: Hemalatha Ramkumar20 January 2025, 4:45 pm
எனர்ஜி டிரிங்க்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஆற்றல் பானங்கள் உடனடி ஆற்றலை அதிகரிப்பதற்காக பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்றாக அமைகிறது. நீண்ட வேலை நேரம் அல்லது அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள் மற்றும் கடுமையான வேலைகளுக்கு இடையே பலர் தங்களை ஆக்டிவாக வைத்துக் கொள்வதற்கு இந்த மாதிரியான பானங்களை பருகுகின்றனர். ஆனால் உண்மையில் இந்த பானங்களை அளவுக்கு அதிகமாக பருகுவது உடலுக்கு பல்வேறு விதமான தீங்குகளை ஏற்படுத்தும். பெரும்பாலான எனர்ஜி டிரிங்குகளில் அதிக அளவு காஃபைன், சர்க்கரை மற்றும் பிற ஸ்டிமுலன்ட்டுகள் எனப்படும் தூண்டுதல் ஏற்படுத்தும் பொருட்கள் இருப்பதால் இதனை அடிக்கடி சாப்பிடுவது நம்முடைய உடலுக்கு நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்.
எனர்ஜி டிரிங்க் குடிப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என்று நினைத்து விடாதீர்கள். இதனால் இதய நோய், மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மெட்டபாலிசம் தொடர்பான கோளாறுகள் ஏற்படலாம். எனவே எனர்ஜி டிரிங்குகளை அதிக அளவு அல்லது வழக்கமான முறையில் குடிப்பதால் ஏற்படும் சில பிரச்சனைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதய நோய்கள்
எனர்ஜி டிரிங்குகளில் அதிக அளவு காஃபைன் உள்ளது. ஒரு கப் காபியை விட அளவுக்கு அதிகமான காஃபைன் ஒரு சில எனர்ஜி பானங்களில் காணப்படுகிறது. இது ஒரு ஸ்டிமுலன்ட்டாக செயல்பட்டு, நம்முடைய இதயத் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் உயர செய்கிறது.
நீரிழப்பு
அதிக அளவு எனர்ஜி பானங்களை பருகுவதால் நீரிழப்பு ஏற்பட்டு சீராக செயல்படுவதற்கான உடலின் திறனில் பிரச்சனை எழுகிறது. தலைவலி, மயக்கம், சோர்வு மற்றும் தசை வலி ஆகியவை நீரிழப்புக்கான ஒரு சில அறிகுறிகள்.
மனநலன்
எனர்ஜி பானங்களில் காணப்படும் அதிக காஃபைன் பதட்டத்தை அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக ஏற்கனவே இந்த மாதிரியான பிரச்சனைகளை அனுபவிக்கும் நபர்களில் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அடிக்கடி எனர்ஜி பானங்களை குடித்தால் உங்களுடைய தூக்கத்தின் அட்டவணை பாதிக்கப்பட்டு தூக்கமின்மை மற்றும் தூக்கத்தின் தரம் மோசமாகிறது.
இதையும் படிக்கலாமே: குளிர்கால சோம்பலை நொடிப்பொழுதில் அகற்றும் உணவுகள்!!!
உடல் எடை அதிகரிப்பு
அடிக்கடி எனர்ஜி பானங்களை குடிப்பதால் ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு, இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் வகை 2 டயாபடீஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அது மட்டுமல்லாமல் இது கொழுப்பு கல்லீரல் நோய் அல்லது இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
அடிமையாகுதல்
இந்த பானங்களை நீங்கள் அடிக்கடி குடிக்கும் பொழுது உங்கள் உடல் இந்த பானங்களை சார்ந்து இருக்க ஆரம்பித்து விடும். எனவே உங்கள் உடலானது வழக்கமாக இயங்குவதற்கு கூட இந்த பானங்கள் தேவைப்படும். இது உங்கள் உடலில் ஒரு வித சுழற்சியை உருவாக்கி, நீங்கள் மென்மேலும் அதிக அளவு எனர்ஜி பானங்களை பருக ஆரம்பித்து, அதற்கு அடிமையாகி விடுவீர்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.