காஸ்ட்லி டை வேண்டாம்… இயற்தையான முறையில் இளநரையை போக்க உதவும் எளிய வழிகள்!!!
Author: Hemalatha Ramkumar13 May 2023, 10:46 am
வயதாகும்போது தான் நரைமுடி தோன்றும் என்ற காலமெல்லாம் மலையேறி போயாச்சு. தற்போது பெரும்பாலான நபர்கள் இளநரையால் அவதிப்பட்டு வருகின்றனர். இது ஒருவரது தன்னம்பிக்கையை குறைக்கிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். நரைமுடியை மறைக்க பலர் கெமிக்கல் சார்ந்த ஹேர் டைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் தலை முடிக்கு கெமிக்கல் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான ஒன்று. இது தலை முடியை இழக்கச் செய்வதோடு ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்க கூடியது. ஆகவே இயற்கையான முறையில் தலை முடியை கருமையாக்கக்கூடிய ஒரு சில வழிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
சிகைக்காய் மற்றும் நெல்லிக்காய்
சிகைக்காய் மற்றும் நெல்லிக்காயாகிய இரண்டு பொருட்களுமே பல நூற்றாண்டுகளாக தலைமுடிக்கு தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நரைமுடியை போக்கவும் இவ்விரண்டு பொருட்களும் உதவும் என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. இதற்கு ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம். அதில் நான்கு தேக்கரண்டி நெல்லிக்காய் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி சீகைக்காய் பொடி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்டாக்கிக் கொள்ளலாம். இதனை தலைமுடியில் தடவி இரவு முழுவதும் வைத்துவிட்டு, காலையில் முடியை அலசிவர கூந்தல் கருமையாகும்.
நெல்லிக்காய் மற்றும் கடுகு எண்ணெய் நெல்லிக்காயில் வைட்டமின் சி ஊட்டச்சத்து நிறைந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். இது தலைமுடிக்கு அதிக நன்மைகளை தரக்கூடியது ஆகும். நரைமுடி கருமையாக மாற நெல்லிக்காய் பொடியை கடுகு எண்ணெய்யோடு காய்ச்சி வெதுவெதுப்பாக கூந்தலில் தடவ வேண்டும். இவ்வாறு ஒரு சில வாரங்கள் செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் பொடி
தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் ஆகிய இரண்டு பொருட்களும் தலைமுடியின் வளர்ச்சியில் பெரிதும் உதவக்கூடியது. முடி உதிர்வை தடுப்பதோடு இது நரை முடியை கருமையாக மாற்றவும், அதனை வலுவாக வைக்கவும் உதவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயோடு ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி செய்து அதனை காய்ச்சவும். எண்ணெய் வெதுவெதுப்பாக மாறியவுடன் இதனை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கெமிக்கல் இல்லாத ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி கூடிய விரைவில் கருமையாகவும் வலிமையாகவும் மாறும்.
மருதாணி மற்றும் இண்டிகோ பொடி
பல ஹேர் டைகள் மருதாணி மற்றும் இண்டிகோ பொடியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது நரைமுடியை கருமையாக்க கூடிய பண்புகளை கொண்டுள்ளது. இதற்கு ஒரு பாத்திரத்தில் இண்டிகோ பொடியுடன் ஒரு தேக்கரண்டி மருதாணி பொடி சேர்த்து அதனுடன் முட்டை மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் ஆக கலந்து தலைமுடியில் தடவ வேண்டும். இதனை ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்பு முடியை அலசவும். இது நரைமுடியை கருமையாக்குவதோடு முடி உதிர்வையும் தடுக்கக்கூடியது.
கடைகளில் விற்கப்படும் காஸ்ட்லியான ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக இது போன்ற இயற்கை வைத்தியங்களை முயற்சி செய்து பக்க விளைவுகள் அற்ற முடிவுகளைப் பெறுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.