சாப்பிடுவதைக் கூட சிரமமாக மாற்றும் வாய்ப்புண்களை குணப்படுத்துவதற்கான பாரம்பரிய மருந்துகள்!!!

Author: Hemalatha Ramkumar
17 December 2024, 5:42 pm

வாய்ப்புண்கள் என்பது நம்மை எரிச்சலூட்டும் ஒரு மிக மோசமான விஷயம். இதனால் சாப்பிடுவது, பேசுவது மற்றும் சிரிப்பது கூட வலி மிகுந்ததாக இருக்கும். இந்த புண்கள் பொதுவாக சிறு காயங்கள், மன அழுத்தம் அல்லது ஒரு சில உணவுகளின் காரணமாக கூட ஏற்படலாம். தாமாக இந்த புண்கள் 1 முதல் 2 வாரங்களுக்குள் சரியாகிவிடும். எனினும் குணப்படுத்தும் செயல்முறையை விரைவுப்படுத்துவதற்கு மற்றும் அசௌகரியத்தை போக்குவதற்கு நீங்கள் சில இயற்கையான வைத்தியங்களை பின்பற்றலாம். அவ்வாறு வாய்ப்புண்களுக்கு குட்பை சொல்லக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தேங்காய் பால் 

தேங்காய் பால் என்பது வெறும் குழம்பு, ஸ்மூத்தி செய்வதற்கு மட்டும் அற்புதமான ஒரு பொருள் கிடையாது. இது வாயில் ஏற்படும் புண்களை ஆற்றுவதற்கு கூட உதவும். வாய்ப்புண்களுக்கு எதிராக வலிமையான பாதுகாப்பு தருவதற்கு தேங்காய்ப்பால் உதவும் என்பது ஒரு ஆய்வில் கூட நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் வீக்க எதிர்ப்பு பண்புகள், வலி மற்றும் வீக்கத்தை குறைத்து புண் இருக்கும் பகுதியில் இயற்கையான குளுமை விளைவை அளித்து புண்களை ஆற்றுகிறது. இதற்கு நீங்கள் சிறிதளவு துருவிய தேங்காயை தண்ணீரில் அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் பாலை வாயில் ஊற்றி 30 வினாடிகளுக்கு கொப்பளிக்கவும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை செய்யுங்கள்.

அதிமதுரம் 

அதிமதுரத்தில் வீக்க எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் வாய்ப்புண்களுக்கு எதிராக இது ஒரு பாரம்பரிய மருந்தாக அமைகிறது. இந்த அதிமதுரம் வாய்ப்புண்களால் ஏற்பட்ட எரிச்சலைப் போக்கி, குணமடையும் செயல்முறையை விரைவுப்படுத்துகிறது. இதற்கு நீங்கள் ஒரு டீஸ்பூன் அளவு அதிமதுர பொடியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து, அதனை நேரடியாக வாய்ப்புண் மீது தடவி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு வாயை கொப்பளிக்கவும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யுங்கள்.

தேன் மற்றும் மஞ்சள் 

தேன் என்பது இயற்கை பாக்டீரியா எதிர்ப்பு ஏஜென்டாக செயல்படுகிறது. அதே நேரத்தில் மஞ்சளில் குர்குமின் என்ற வீக்க எதிர்ப்பு காம்பவுண்ட் இருப்பதால் இவை இரண்டும் இணைந்து வாய்ப்புண்களுக்கு எதிராக ஒரு வலிமையான மருந்தாக செயல்படுகின்றன. இதனை பயன்படுத்துவதற்கு ஒரு டீஸ்பூன் தேனை ஒரு சிட்டிகை மஞ்சள் தூளோடு கலந்து வாய் புண் மீது தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் வாயை கழுவ வேண்டும்.

இதையும் படிச்சு பாருங்க:  பனிக்காலத்தில் ஏற்படும் டிரை ஸ்கின் பிரச்சினையை ஒரேடியா விரட்ட 4 சூப்பர்ஃபுட் இருக்கு!!!

கற்றாழை ஜெல் 

கற்றாழையில் சருமத்தை ஆற்றும் பண்புகள் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். எனினும் வாய்ப்புண்களை குணப்படுத்தும் பண்புகளும் கற்றாழையில் காணப்படுகிறது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். இதில் உள்ள ஆற்றும் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் உடனடி வாய்ப்புண்களில் இருந்து உடனடி நிவாரணத்தை அளித்து, குணமடையும் செயல்முறையை வேகமாக்குகிறது. இதற்கு நீங்கள் ஃபிரஷான கற்றாழை சாற்றை எடுத்து நேரடியாக உங்களுடைய வாய்ப்புண் மீது தடவலாம். இவ்வாறு 2 முதல் 3 முறை செய்து வர விரைவான முடிவுகளை பெறலாம்.

கிராம்பு எண்ணெய் 

பல் வலிகளுக்கு மட்டுமல்ல கிராம்பு எண்ணெய் வாய் புண்களால் ஏற்பட்ட வலியிலிருந்து தற்காலிக நிவாரணம் பெறுவதற்கும் உதவும். அதுமட்டுமல்லாமல், தொற்றுகளை தடுப்பதற்கு இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகிறது. இதற்கு நீங்கள் ஒரு சில துளிகள் கிராம்பு எண்ணெயை தேங்காய் எண்ணெயோடு கலந்து சுத்தமான விரலால் வாய்ப்புண் மீது தடவ வேண்டும். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு வாயை கொப்பளித்துக் கொள்ளுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Highest paid bodyguards in Bollywood கோடிகளை அள்ளும் சினிமா பிரபலங்களின் பாடிகார்ட்ஸ்…சம்பளத்தை கேட்டிங்கனா ஷாக் ஆவீங்க..!
  • Views: - 59

    0

    0

    Leave a Reply