மழைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க உங்க டயட் லிஸ்ட் இந்த மாதிரி தான் இருக்கணும்!!!
Author: Hemalatha Ramkumar28 September 2024, 11:14 am
விண்ணில் இருந்து மழைத்துளிகள் விழும் அழகு, ஈரமான மண்ணின் வாசனை மற்றும் சுற்றுச்சூழல் எங்கும் பச்சை பசேலென வளர்ந்திருக்கும் செடி கொடிகள் ஆகிய அனைத்தும் மழைக்காலத்தின் வருகையை நமக்கு அறிவுறுத்தும். ஆனால் சுற்றுச்சூழலின் இந்த மாற்றத்தோடு நமது உடலுக்கும் மாற்றம் தேவைப்படுகிறது. இந்த குளிர்ந்த வானிலையை சமாளிப்பதற்கு நாம் கதகதப்பான, காரசாரமான உணவுகளை தேடுவோம். சுவையாக உள்ள சூப்பர் ஃபுட்களை சாப்பிடுவது மட்டுமல்லாமல் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இந்த மழைக்கால மாதங்களில் உங்களை ஆரோக்கியமாகவும், ஆற்றல் மிகுந்ததாகவும் வைக்க உதவும்.
மழை பொழிந்து கொண்டிருக்கும் பொழுது வீட்டிற்குள் அடக்கமாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டே ஏதாவது நொறுக்கு தீனி சாப்பிடுகிற பழக்கம் பலருக்கு இருக்கும். ஆனால் இது மாதிரியான பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகளை தவிர்ப்பது நல்லது. ஆகவே ஆரோக்கியமான முறையில் உணவு தேர்வுகளை எப்படி செய்வது என்பது சம்பந்தமான சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
பச்சை காய்கறிகள் மழைக்காலத்தில் பல்வேறு வகையான ஃபிரெஷான காய்கறிகளும், கீரை வகைகளும் நமக்கு எளிதாக கிடைக்கும். உதாரணமாக வெந்தயக்கீரை, கடுகு கீரை போன்றவை. இவற்றில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஏராளம். மேலும் குறிப்பாக வைட்டமின்கள் A மற்றும் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பருவ கால தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது.
முளைகட்டிய பயிர்கள்
முளைகட்டிய பயிர்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு போஷாக்கு நிறைந்தவை. அவை எளிதில் ஜீரணமாகக் கூடியவை. அவற்றில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் என்சைம்கள் அதிகம் காணப்படுகிறது. மழைக்காலத்தில் அதிக அளவில் வளர்ந்து இருக்கும் இந்த பயிர்களை முளைக்கட்டிய பிறகு சாப்பிடுவது நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். பச்சை பயிர், வெந்தயம் போன்றவற்றை நீங்கள் முளைகட்டி சாப்பிடலாம். மழைக்காலத்திற்கு தேவையான நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க அத்தியாவசியமான புரோட்டின், வைட்டமின் B காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் C போன்ற ஊட்டச்சத்துக்கள் இவற்றில் உள்ளது.
பருவ கால பழங்கள்
லிச்சி, நாவல் பழம் மற்றும் பிளம்ஸ் போன்ற மழைக்காலத்தில் மட்டுமே கிடைக்கும் பழங்களை சாப்பிட தவறாதீர்கள். அதேபோல உள்ளூரில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய பழங்களை தவறாமல் சாப்பிடுங்கள். இவற்றில் உங்களுக்கு தேவையான நீர்ச்சத்து வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் இருக்கும். லிச்சி பழத்தில் வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து உள்ளது. அதே நேரத்தில் நாவல் பழம் ரத்தசர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான குணங்களைக் கொண்டிருக்கிறது. பிளம்ஸ் பழம் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்தின் சிறந்த மூலமாக அமைகிறது.
இஞ்சி
இஞ்சி என்பது வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நன்மைகளை அளிக்கிறது. ஆனால் அதன் வெப்பமூட்டும் பண்புகள் குறிப்பாக மழைக்காலத்தில் பயனுள்ளதாக அமைகிறது. இஞ்சியில் வீக்க எதிர்ப்பு பண்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இருப்பதால் இது சளி, இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு போன்ற மழைக்கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவுகிறது.
மஞ்சள்
தங்க நிற அதிசய மசாலா பொருளான மஞ்சள் இன்றைய சமையலறையில் நிச்சயமாக இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு வழங்கும் பல்வேறு நன்மைகளுக்காக பெருமையாக பேசப்படுகிறது. இஞ்சி போலவே மஞ்சளிலும் வீக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன. மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுகளில் இருந்து நமது உடலை பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து தினமும் பருகிவர அதன் பலன்களை முழுமையாக பெறலாம்.
எனவே இந்த மழைக்காலத்தை மகிழ்ச்சியோடு அனுபவிக்க இந்த உணவுகளை உங்களுடைய அன்றாட டயட்டில் சேர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.