மழைக்காலத்துல ரத்த சர்க்கரை அளவ குறைக்க பிராக்டிக்கலா என்ன செய்யலாம்னு தெரிஞ்சுக்குவோமா…???
Author: Hemalatha Ramkumar7 October 2024, 5:39 pm
மழைக்காலம் காரணமாக நம்முடைய வாழ்க்கை முறை, உணவு மற்றும் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். அதிலும் குறிப்பாக டயாபடீஸ் அல்லது அதிக சர்க்கரை அளவுகளை கொண்டிருப்பவர்கள் நிச்சயமாக ஒரு சில மாற்றங்களை உட்படுத்த வேண்டும். இந்த மழையானது நமது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே என்னதான் பருவநிலையில் மாற்றம் இருந்தாலும் இன்சுலின் உணர்திறனை சரியான நிலையில் வைத்திருப்பது அவசியம். அந்த வகையில் மழைக்காலத்தில் அதிக சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் எதார்த்தமான சில குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.
உணவை கண்காணிப்பது
மழைக்காலத்தில் பலர் நல்ல சூடான, அதே நேரத்தில் காரசாரமான உணவை சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு சில சமயங்களில் இது ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதற்கு வழிவகுக்கலாம். ஆனால் அதிக சர்க்கரை ரத்த சர்க்கரை இருப்பவர்கள் கட்டாயமாக இது போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பீன்ஸ், முழு தானியங்கள், கீரை வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மெதுவாக்கும். இதனால் ரத்த சர்க்கரை அதிகரிப்பது தவிர்க்கப்படும்.
தண்ணீர் பருகுதல் மழைக்காலத்தில் நமக்கு தாகம் எடுக்காத காரணத்தால் தண்ணீர் குடிப்பதையே மறந்து வேலைகளை பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் அவ்வாறு இருப்பது முற்றிலும் தவறு. எந்த காலமாக இருந்தாலும் தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். மேலும் மழைக்காலத்தில் ஒரு சிலர் அடிக்கடி டீ மற்றும் காபியை குடிப்பார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.வ முடிந்த அளவு டீ, காபி போன்றவற்றை குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.
உடலை ஆக்டிவாக வைத்துக் கொள்வது
மழைக்காலத்தில் நாம் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடப்பதையே விரும்புவோம். ஆனால் அவ்வாறு சோம்பேறித்தனமாக இல்லாமல் வீட்டிற்குள் இருந்தாலும் உங்களை ஆக்டிவாக வைத்துக் கொள்வதற்கு ஒரு சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும். வீட்டிற்குள்ளேயே அங்கும் இங்குமாக நடப்பது, நீட்சி பயிற்சிகள், யோகா செய்வது, ஆடல் போன்றவற்றில் ஈடுபடலாம். நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவுகள் குறையும்.
ரத்த சர்க்கரை அளவுகளை கண்காணிக்கவும்
வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நமது உடலானது உணவு மற்றும் உடற்பயிற்சிக்கு வழங்கும் எதிர்வினையை பாதிக்கலாம். ஆகவே வழக்கமான முறையில் ரத்தசர்க்கரை அளவுகளை கண்காணிப்பது அவசியம். அடிக்கடி மழைக்காலத்தில் ரத்த சர்க்கரையை பரிசோதிக்க வேண்டும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்
மழைக்காலம் ஒரு சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதுவே ஒரு சிலர் மன அழுத்தமாக உணர்வார்கள். இது ரத்த சர்க்கரை அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே உங்களுடைய ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முக்கியம். மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு உடற்பயிற்சிகள், யோகா, ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள், தியானம் போன்றவற்றில் நீங்கள் ஈடுபடலாம்.
எனவே மழைக்காலத்தில் ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துவதற்கு உணவு, நீர்ச்சத்து, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தம் போன்றவற்றில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த குறிப்புகளை பின்பற்றினாலே உங்களுடைய ரத்த சர்க்கரை அளவுகளை மட்டும் அல்லாமல் உங்கள் மொத்த ஆரோக்கியத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்ளலாம்.