பீரியட்ஸ் சமயத்துல உண்டாகும் வாயு பிரச்சினையில இருந்து தப்பிக்க சூப்பரான வழி ஒன்னு இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
18 September 2024, 6:17 pm

மாதவிடாயை அனுபவிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தான் அதன் வலியும், வேதனையும் புரியும். மாதவிடாயின் பொழுது ஏற்படும் கடுமையான வயிற்று வலி, முதுகு வலி, மோசமான மனநிலை, சோர்வு, அதிகப்படியான இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் மாதவிடாயை இன்னும் மோசமாக்குகிறது. அது மட்டுமல்லாமல் பல பெண்கள் வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளாலும் அவதிப்படுகின்றனர். இது குறிப்பாக மாதவிடாய் சுழற்சியின் பொழுது வெளியிடப்படும் ஒரு சில ஹார்மோன்களால் ஏற்படுகிறது. 

மாதவிடாய் சுழற்சிக்கு முன்பு ஏற்படும் ப்ரொஜஸ்டரான் அளவு குறைவு காரணமாகவும் இது ஏற்படலாம். எனினும் ஒரு சில முக்கியமான விஷயங்களை பின்பற்றுவது இந்த நிலையை சமாளிப்பதற்கு உதவும். உதாரணமாக உணவில் மாற்றங்கள், உணவு அளவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது போன்றவை மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று உப்புசம் மற்றும் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட உதவும். அந்த வகையில் மாதவிடாய் சமயத்தில் வாயு தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு உதவும் ஒரு சில எளிமையான வழிகளை இப்பொழுது பார்ப்போம்.

முதலில் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் இது தண்ணீர் தேக்கத்திறனை அதிகரித்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். மேலும் வாயு தொல்லையை அதிகரிக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் குறிப்பாக சோடியம் அதிக அளவில் இருக்கும். உப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைவாக சாப்பிடுவது வீக்கத்தை குறைத்து, ப்ராஸ்டாகிளான்டின்ஸ் அதிகப்படியாக வெளியிடப்படுவதை குறைக்கிறது. இதனால் வாயு மற்றும் வயிற்று உப்புசமும் குறைகிறது. 

ஃப்ரெஷான காய்கறிகளை சாப்பிடுவதும் செரிமான ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு அவசியம். அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மலத்தை மென்மையாக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கும். எனினும் ப்ராக்கோலி மற்றும் காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் வாயு உற்பத்தியை அதிகரிக்கும் என்பதால் காய்கறிகள் சாப்பிடும் பொழுது நீங்கள் என்ன வகையான காய்கறிகள் சாப்பிடுகிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட தக்காளி போன்றவை மாதவிடாய் வாயு மற்றும் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். 

குடல் பாக்டீரியாவின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்க உங்களுடைய உணவில் ப்ரோபயோடிக்களை சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர், மோர், லாசி போன்ற ப்ரோபயோடிக் நிறைந்த உணவுகள் செரிமானத்தை ஊக்குவித்து, வாயு மற்றும் வயிற்று உப்புசத்தை குறைக்கும். வழக்கமான முறையில் நீங்கள் ப்ரோபயாடிக் நிறைந்த உணவுகளை எடுத்து வந்தாலே உங்களுடைய செரிமான ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு மாதவிடாயின் பொழுது ஏற்படும் அசௌகரியம் குறையும். 

உடலுக்கு போதுமான அளவு நீர்ச்சத்து தருவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம். அதிலும் குறிப்பாக உங்கள் மாதவிடாய் சமயத்தில் இது மிக அவசியம். அதிக அளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள அதிக சோடியத்தை வெளியேற்றி அதன் விளைவாக வயிற்று உப்புசமும் குறையும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் பருகுங்கள். மேலும் புதினா டீ அல்லது இஞ்சி டீ போன்ற மூலிகை தேநீர்களையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம். இது செரிமான அமைப்பை ஆற்றும். 

ஒரே நேரத்தில் அதிக உணவு சாப்பிடுவதற்கு பதிலாக உணவை சிறிய அளவுகளாக பிரித்து நாள் முழுவதும் அடிக்கடி சாப்பிடுங்கள். இதன் மூலமாக உங்களுடைய  வயிற்றுக்கு நிரம்பிய உணர்வு அளிப்பதை நீங்கள் தவிர்க்கலாம். அதுமட்டுமல்லாமல் சிறிய அளவு உணவுகள் செரிமானமாவதற்கு எளிதாக இருக்கும். 

ஒரு சிலருக்கு மாதவிடாயின் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும். எனவே மாதவிடாய் சமயத்தில் வாயு தொல்லையில் இருந்து தப்பிப்பதற்கு நீங்கள் முதலில்  மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக நீங்கள் மலச்சிக்கல் இருந்து நிவாரணம் பெறலாம். 

மாதவிடாயின் போது நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் போன்ற சிறிய அளவு தீவிரம் கொண்ட வொர்க்கவுட்டில் ஈடுபடுவது வயிற்று உப்புசம் மற்றும் வாயுவை குறைக்கும். அது மட்டுமல்லாமல் இது மாதவிடாய் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். 

மாதவிடாய் சமயத்தில் வாயு தொல்லை ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனை. எனினும் எளிமையான தீர்வுகள் மூலமாக இதனை நீங்கள் சமாளிக்கலாம். சிறிய அளவில் உணவுகள் சாப்பிடுவது, ஃபிரஷான காய்கறிகளை எடுத்துக் கொள்வது உங்களை நன்றாக உணர வைக்கும். கூடுதலாக உப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடியம் நிறைந்த உணவுகளில் இருந்து விலகி இருக்கவும். மேலும் லேசான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 246

    0

    0