ஆபீஸ்ல வொர்க் பிரஷர் அதிகமா கொடுக்குறாங்களா… இந்த டிப்ஸ் மட்டுமே போதும்… அசால்ட்டா சமாளிச்சுடலாம்!!!
Author: Hemalatha Ramkumar25 September 2024, 5:31 pm
இன்று வேலை காரணமாக ஏற்படும் மன அழுத்தம் என்பது மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது. ஒருவர் செய்யக்கூடிய வேலையையும் தாண்டி அளவுக்கு அதிகமாக வேலை கொடுப்பது, வேலையை விரைவாக முடிக்க சொல்லி அழுத்தம் கொடுப்பது மற்றும் 8 மணி நேரத்திற்கு அதிகமாக வேலை வாங்குவது போன்றவை அனைவரையும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கலாம். இதில் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், முதுகு வலி, கழுத்து வலி, அதிக ரத்த அழுத்தம் மற்றும் மோசமான மன ஆரோக்கியம், எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. எனவே பணிக்கு செல்பவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்யும் அதே நேரத்தில் தங்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் வேலை சார்ந்த மன அழுத்தத்தை ஒரு சில பயிற்சிகள் மூலமாக எளிதாக எதிர்கொள்ளலாம். அதற்கான சில குறிப்புகள் இதோ:-
தினமும் உடற்பயிற்சி தினந்தோறும் உடற்பயிற்சி செய்யும் பொழுது உங்கள் உடலில் மன அழுத்த ஹார்மோன்கள் உற்பத்தியாவது குறையும். மேலும் உடற்பயிற்சியானது உங்களுடைய உடல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கும். உடற்பயிற்சி உங்களுடைய மனநிலையை மேம்படுத்த உதவும் என்டார்பின்கள் என்ற ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டுகிறது. அது மட்டுமல்ல, தினமும் உடற்பயிற்சி செய்துவர உங்களுடைய தூக்க தரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
சுய பராமரிப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்
ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை பிரேக் எடுத்துக்கொண்டு, கை கால்களை நீட்டி அங்குமிங்கமாக நடப்பதை உறுதி செய்யுங்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்க வேண்டாம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதால் தசை சோர்வு மற்றும் அழுத்தம் ஏற்படலாம்.
எல்லைகளை அமைத்துக் கொள்ளுங்கள்
உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை வெளிப்படையாக உங்களது சூப்பர்வைசர் அல்லது உடன்பணிபுரிபவர்களுடன் கூறுங்கள். தேவைப்பட்டால் அவர்களின் உதவியை நாடுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன மற்றும் உங்களுடைய முன்னுரிமைகள் என்னென்ன என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுங்கள். அத்தியாவசியம் அல்லாத வேலைகளுக்கு முடியாது என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: நான் பண்ணதவிட இன்பநிதி அதிகமா லூட்டி பண்ணிட்டு இருக்கான்.. உதயநிதி ஓபன் டாக்..!
மனதை ஒருங்கிணைக்கும் பயிற்சிகளில் ஈடுபடவும்
ரிலாக்ஸ் ஆவதற்கு மூச்சுப் பயிற்சியை நீங்கள் செய்யலாம். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சில ஆழ்ந்த சுவாசங்களை எடுக்கலாம். பிறரிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் உடன் பணிபுரிபவர்களுடன் ஆரோக்கியமான உறவை பராமரிக்கவும். சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். உங்களுடைய கடுமையான உழைப்புக்கு நீங்களே உங்களை பாராட்டிக் கொள்ளுங்கள். அடுத்த நாளுக்கான திட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
சரிவிகித உணவு மற்றும் நல்ல தரமான தூக்கம்
அனைத்து விதமான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சரிவிகித உணவு மற்றும் நல்ல இரவு தூக்கமானது உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பை ஊக்குவித்து, உங்கள் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியோடு இருப்பதற்கும் உதவுகிறது. வேலை இடத்தில் உங்களுடைய கவனத்திறன் அதிகரிக்கவும், மன அழுத்த மேலாண்மைக்கும் இது பெரிய அளவில் கை கொடுக்கிறது.
உங்கள் ஆரோக்கியத்தை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள். எனவே உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். அது உங்களை கவனித்துக் கொள்ளும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.