நீங்கள் வாங்கும் நெய் தரமானதா இல்லையா என்பதை ஈசியா கண்டுபிடிச்சுடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
12 September 2024, 3:35 pm

பல்வேறு இந்திய உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளில் நெய் பயன்படுத்தப்படுகிறது. இது வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல் அதில் உள்ள ஆரோக்கிய பலன்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெண்ணெயில் இருக்கும் தண்ணீரை நீக்கிவிட்டு தயாரிக்கப்படும் இந்த நெய்யானது செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பது போன்ற நன்மைகளை அளிக்கிறது. ஆனால் நீங்கள் தரமான நெய்யை சாப்பிட்டால் மட்டுமே இந்த பலனை உங்களால் பெற முடியும். உணவு கலப்படம் என்பது இன்று ஒரு பொதுவான விஷயமாக மாறிவிட்டது.

பல உற்பத்தியாளர்கள் நெய்யோடு சமையல் எண்ணெய் அல்லது ஸ்டார்ச் போன்றவற்றை கலந்து விடுகின்றனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பு கூட 3000 கிலோ கிராம் அளவு கலப்படம் செய்யப்பட்ட நெய் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே நீங்கள் வாங்கும் நெய் தரமானதா இல்லையா என்பதை கண்டறிவது அவசியம். அதனை வீட்டில் இருந்தபடியே எப்படி செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஃப்ரீசிங் சோதனை
சிறிய அளவு நெய்யை கண்ணாடி ஜார் ஒன்றில் வைத்து அதனை ஒரு சில மணி நேரங்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும். அது தூய்மையான நெய்யாக இருந்தால் கட்டியாக மாறிவிடும். ஒருவேளை அவ்வாறு இல்லாமல் பாதி அளவு கட்டியாகவும் மீதி தண்ணியாகவும் இருந்தால் அது சோயாபீன்ஸ், தேங்காய் எண்ணெய் அல்லது சன் ஃபிளவர் போன்ற எண்ணெய்களால் கலப்படம் செய்யப்பட்ட நெய்யாகும்.

ஹீட்டிங் சோதனை

நெய்யின் தரத்தை உறுதிப்படுத்தும் இந்த ஹீட்டிங் சோதனையில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நெய்யை குறைந்த வெப்பத்தில் ஒரு கடாயில் சேர்க்கவும். அது சுத்தமான நெய்யாக இருந்தால் உடனடியாக உருகி தெளிவான திரவமாக மாறிவிடும். ஒருவேளை அது உருகுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டாலோ அல்லது கசடுகள் இருந்தாலும் அது கலப்படம் செய்யப்பட்ட நெய்.

அயோடின் சோதனை

சிறிய அளவு நெய்யில் ஒரு சில துளிகள் அயோடின் சொல்யூஷன் சேர்க்கவும். ஒருவேளை நீல நிறமாக மாறினால் அதில் ஸ்டார்ச் இருப்பதை குறிக்கிறது. இது கலப்படம் செய்யப்பட்ட நெய்யாகும். இதனை நீங்கள் உட்கொள்ளக்கூடாது.

சால்யுபிலிட்டி சோதனை

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்க்கவும். சுத்தமான நெய் மேற்பரப்பில் மிதக்கும். ஒருவேளை அது தண்ணீரின் அடியில் தங்கினால் அது எண்ணெய்களோடு கலப்படம் செய்யப்பட்ட நெய்.

ஸ்பூன் சோதனை
ஒரு ஸ்பூன் நெய் எடுத்து அதனை நெருப்பின் மீது சூடுப்படுத்தவும். சுத்தமான நெய் முழுவதுமாக உருகி தெளிவான திரவமாக மாறி எந்த ஒரு கசடையும் அளிக்காது. ஒருவேளை அது பிசுபிசுப்பான கசடை தந்தால் அது தூய்மையற்ற நெய்யாகும்.

பேப்பர் சோதனை
ஒரு துளி நெய்யை ஒரு வெள்ளை பேப்பர் அல்லது துணியில் வைத்து ஒரு சில நிமிடங்களுக்கு அப்படியே விடவும். தூய்மையான நெய்யால் ஏற்படும் எண்ணெய் கரை படிப்படியாக மறைந்து விடும். ஒரு வேலை அந்த கரை மாறாமல் அப்படியே இருந்து பிசுபிசுப்பாக இருந்தால் அது காய்கறி எண்ணெய் சேர்க்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!