உடலுக்கு வலு சேர்க்கும் கருப்பு கவுனி அரிசி கஞ்சி!!!

Author: Hemalatha Ramkumar
3 December 2024, 6:50 pm

கருப்பு அரிசி என்றும் அழைக்கப்படும் கருப்பு கவுனி அரிசியில் பிற அரிசிகளோடு ஒப்பிடுகையில் அதிக அளவு புரோட்டின், இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது. வழக்கமாக இது செட்டிநாடு கவுனி அரிசி இனிப்பு செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதனை வைத்து சுவையான கஞ்சியும் தயாரிக்கலாம். இந்த பதிவில் கருப்பு கவுனி அரிசி வைத்து கஞ்சி எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்போம். 

கவுனி அரிசி ஊறுவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால் சமைப்பதற்கு முந்தைய நாளே அதனை நன்றாக சுத்தம் செய்துவிட்டு தண்ணீரில் ஊற வைப்பது நல்லது. ஒருவேளை நீங்கள் மறந்து விட்டால் சமைப்பதற்கு 1 முதல் 2 மணி நேரம் முன்பாவது ஊறவைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து அதன் பிறகு பிரஷர் குக்கரில் சேர்த்து சமைக்கலாம். 

செய்முறை 

முதலில் கவுனி அரிசியை ஊறவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஊற வைப்பதற்கு மறந்து விட்டால் சமைப்பதற்கு 1/2 மணி நேரம் முன்பு சுடு தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம். கவுனி அரிசியை ஊற வைத்த தண்ணீர் ஊதா நிறத்தில் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இது இந்த அரிசியில் தனித்துவமான நிறமாகும். 

இப்போது ஊற வைத்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனை பேஸ்டாக அரைக்க கூடாது. கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரிசி அனைத்தும் ஒன்றும் பாதியுமாக உடைந்து இருந்தால் போதுமானது. இப்போது அரைத்த அரிசியை ஒரு பிரஷர் குக்கரில் எடுத்துக் கொள்ளலாம். 

இதையும் படிக்கலாமே: ஃப்ரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுறதுக்கென்னவோ நல்லா தான் இருக்கு… ஆனா கேன்சர் பொறுப்ப யாரு ஏத்துக்குறது…???

ஒரு கப் கவுனி அரிசிக்கு 5 கப் தண்ணீர் போதுமானதாக இருக்கும். இதில் தோலுரித்த பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். அடுத்தபடியாக முழு மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கூடவே கருப்பு மிளகையும் சேர்த்துக் கொள்ளலாம். 

அடுத்தபடியாக வெந்தய விதைகள், சீரகம் ஆகிய பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது பிரஷர் குக்கரை மூடி விட்டு 4 முதல் 5 விசில் வரை காத்திருக்கவும். பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து ஒரு கரண்டியை வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

இந்த கஞ்சிக்கு தேவையான உப்பு சேர்த்து கிளறவும். கஞ்சி கெட்டியாக இருந்தால் சிறிதளவு சுடுதண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இறுதியாக தேங்காய் பால் சேர்த்து கலக்கவும். அவ்வளவுதான் கருப்பு கவுனி கஞ்சி தயார். இதனை ஊறுகாய் அல்லது சட்னியோடு பரிமாறும். 

இந்த கருப்பு கவுனி அரிசி ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்குகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால் இது வீக்கத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது. இதனை நீங்கள் காலை உணவாக சமைத்து சாப்பிடலாம்.

  • Honey Rose Complaint Chemmanur Owner Bobby Arrest பிரபல நடிகையிடம் பாலியல் அத்துமீறல்… பதுங்கிய பிரபல தொழிலதிபர் கைது!
  • Views: - 135

    0

    0