வீட்டில் மதிய நேரத்திற்கு செய்யும் சாதம் மீந்துவிட்டால் பெரும்பாலான வீடுகளில் அதனை குப்பையில் தான் வீசுவார்கள். இரவு நேரத்திற்கு டிபன் செய்ய வேண்டும் என்பதால் இந்த சாதம் அப்படியே கெட்டுப் போய் விடுகிறது. ஆனால் இனியும் மீந்து போன சாதத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை. மீந்த சாதத்தை வைத்து மிருதுவான ரைஸ் சப்பாத்தி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரைஸ் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:-
ஒரு கப் வடித்த சாதம்
1/2 கப் கோதுமை மாவு
1/4 கப் மைதா மாவு தேவையான அளவு எண்ணெய்
சுவைக்கு ஏற்ப உப்பு
செய்முறை விளக்கம்:-
ரைஸ் சப்பாத்தி செய்வதற்கு ஒரு மீடியம் அளவு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஒரு கப் வடித்த சாதத்தை சேர்க்கவும். இதனோடு 1/4 கப் மைதா மற்றும் 1/4 கப் கோதுமை மாவு சேர்க்கவும். மைதா மாவு சேர்க்க வேண்டாம் என நினைப்பவர்கள் அதற்கு பதிலாக 1/2 கப் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு அகன்ற பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் 1/4 கப் கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசையவும்.
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பிசைந்து கொள்ளுங்கள். மாவை பிசைந்த பிறகு அதன் மீது எண்ணெய் தடவி பத்து நிமிடத்திற்கு அப்படியே ஊற வைத்து விடலாம். பின்னர் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகள் மீது கோதுமை மாவு தூவி சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து எடுக்கவும்.
வடித்த சாதத்தை சேர்த்துள்ளதால் கைகளில் ஒட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆகவே சப்பாத்தியை தேய்க்கும் பொழுது கையில் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் செய்து வைத்த சப்பாத்தியை ஒவ்வொன்றாக தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக இருபுறமும் திருப்பி போட்டு எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் மிருதுவான ரைஸ் சப்பாத்தி இப்பொழுது தயார். சாதமும் வீணாகாது அதோடு சப்பாத்தியும் கிடைச்சாச்சு, இரவு டிபனும் தயாராயிற்று.