இந்த ஒரு பானம் போதும்… ஆரோக்கியமும் கிடைக்கும்… அதே சமயம் சருமத்தையும் கவனிச்சா மாதிரி ஆச்சு!!!
Author: Hemalatha Ramkumar28 June 2023, 10:32 am
இயற்கையான முறையில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக மாற்றவும் அதற்கு போதுமான நீரேற்றம் அளிக்கவும் ஏதாவது ஒரு வழி நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த டீடாக்ஸ் பானம் (detox drink) உங்களுக்கு உதவியாக இருக்கும். எலுமிச்சை, வெள்ளரிக்காய் மற்றும் புதினா ஆகிய மூன்று பொருட்களை சேர்த்து செய்யப்படும் இந்த பானத்தில் நமது சருமத்திற்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது. நேரத்தை கடத்தாமல் இப்பொழுது இந்த பானத்தை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
டீடாக்ஸ் பானம் செய்வதற்கு முதலில் ஃபிரெஷான ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் ஒரு சிறிய அளவு வெள்ளரிக்காயை நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் ஒரு பெரிய ஜாரில் சேர்க்கவும். அடுத்து இந்த ஜாரில் ஒரு கையளவு ஃபிரஷான புதினா இலைகளை சேர்க்கவும். பின்னர் அது முழுவதும் தண்ணீர் ஊற்றி அதனை குளிர்சாதன பெட்டியில் ஒரு இரவு முழுவதும் வைத்து விடுங்கள்.
அடுத்த நாள் அந்த தண்ணீரை வடிகட்டி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும். இப்பொழுது நமது டீடாக்ஸ் பானம் தயாராகிவிட்டது. இதன் பலன்களைப் பெற தினமும் காலையில் இதனை பருகுங்கள். நீங்கள் விருப்பப்பட்டால் இதனை நாள் முழுவதும் கூட பருகலாம். இப்பொழுது இந்த பானத்தை பருகுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
◆சருமத்தை ஹைட்ரேட் செய்கிறது. மூன்று பொருட்களுமே நீர்ச்சத்து நிறைந்த பொருட்கள். ஆகையால் நமது சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்து நமக்கு கிடைக்கிறது.
◆உடலை ஹைட்ரேட் செய்கிறது. நல்ல ஆரோக்கியத்திற்கு நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது அவசியம். அந்த வகையில் நாம் தயாரித்துள்ள இந்த பானத்தில் சேர்க்கப்பட்டுள்ள வெள்ளரிக்காயில் 95 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது. இது நமது உடலை நீரேற்றமாக இருக்க செய்வதோடு, நம்மை புத்துணர்ச்சியோடு பார்த்துக் கொள்கிறது.
◆கழிவு நீக்க பண்புகள் உள்ளது. எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காயில் உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை அகற்றக் கூடிய பண்புகள் காணப்படுகிறது. இதனால் நமது உடல் சுத்தமாகிறது.
◆வீக்கம் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. புதினாவில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் காரணமாக இது எரிச்சல் அடைந்த சருமத்தை ஆற்றி சருமத்தில் ஏதேனும் சிவத்த் இருந்தால் அதனை போக்குகிறது.
◆நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவு இருப்பது நமக்கு தெரியும். இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் புதினா இலையில் காணக்கூடிய அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இந்த பானத்தை வழக்கமாக குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
◆வெள்ளரிக்காயில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு அற்புதமான பானம். அதோடு எலுமிச்சை வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க உதவுவதால் உடல் எடை குறைக்க உதவுகிறது.
◆வெள்ளரிக்காயில் இருக்கக்கூடிய நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து காரணமாக இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. வயிற்றில் ஏற்படும் மந்த தன்மையை போக்க புதினா இலைகள் உதவுகிறது. ஆகவே இந்த பானம் நமது செரிமான ஆரோக்கியத்தையும் கூடவே கவனித்துக் கொள்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.