மீந்து போன தோசை மாவில் அசத்தலான ருசியில் முட்டை பணியாரம்!!!
Author: Hemalatha Ramkumar29 November 2024, 8:02 pm
மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பியவுடன் சட்னி தொட்டு குழி பணியாரம் சாப்பிட்ட அனுபவம் 90s கிட்ஸ்களுக்கு நிச்சயமாக இருக்கும். குழிப்பணியாரம் நமக்கு அவ்வளவு பிடிக்கும். இது பார்ப்பதற்கு குட்டி குட்டியாய் அழகாக இருப்பது மட்டுமல்லாமல், செய்வதற்கும் மிகவும் எளிமையானது. இந்த பதிவில் மீந்து போன தோசை மாவில் முட்டை சேர்த்து அடித்து, மேலும் ஒரு சில பொருட்களை சேர்த்து குழிப்பணியாரை சட்டியில் வேகவைத்தால் முட்டை பணியாரம் தயார். இதற்கான எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி அல்லது தோசை மாவு
முட்டை
சமையல் எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
இஞ்சி
பச்சை மிளகாய்
வெங்காயம்
கொத்தமல்லி தழை
மிளகு பொடி
உப்பு
முட்டை பணியாரம் செய்முறை
முதலில் முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். வேறொரு கிண்ணத்தில் தோசை மாவு எடுத்து அதில் நாம் கலந்து வைத்துள்ள முட்டை மற்றும் தேவையான அளவு உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இதையும் படிக்கலாமே: மொபைல் அதிகமா யூஸ் பண்ணா கிட்டப்பார்வை ஏற்படுமா… கண் ஆரோக்கியம் குறித்த கட்டுக்கதைகளும், உண்மைகளும்!!!
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு பொரிந்த உடன் பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், ஒரு இன்ச் அளவு இஞ்சி சேர்த்து வதக்கவும்.
ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு இந்த வதக்கிய பொருட்களை நாம் கலந்து வைத்துள்ள மாவோடு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழையையும் சேர்த்து கிளறவும்.
இப்போது குழிப்பணியாறு சட்டியை சூடாக்கி குழிகளில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, ஒவ்வொரு குழியிலும் நாம் கலந்து வைத்துள்ள மாவை சேர்க்கவும். இரண்டு பக்கங்களும் பொன்னிறமாக மாறி வரும் வரை குறைந்த தீயில் வைத்து வேக வைக்கவும். இந்த முட்டை பணியாரத்தை சூடாக காரசாரமான சட்னியோடு பரிமாறவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.