கொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஃபிட்டாக வைக்கும் மொறு மொறு கம்பு தோசை!!!
Author: Hemalatha Ramkumar4 December 2024, 7:36 pm
நம்முடைய முன்னோர்கள் சிறுதானியங்களை அதிக அளவு பயன்படுத்தி ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிட்டு வந்ததன் காரணமாகவே அவர்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று நம்முடைய முன்னோர்களை ஒப்பிடும்பொழுது ஆயுட்காலம் மிகவும் குறைந்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு மற்றும் வாழ்க்கை முறை. சிறு தானியங்களை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்து வர உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் கிடைத்து ஆரோக்கியம் மேம்படும். அந்த வகையில் காலை உணவாக கம்பு தோசை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. கம்பில் வைட்டமின்கள், மினரல்கள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் பருமனை அதிகரித்து, ரத்த சர்க்கரை அளவை சீராக்கும். இப்போது கம்பு தோசை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் கம்பு
1/4 கப் முழு வெள்ளை உளுந்து
1/2 டீஸ்பூன் வெந்தயம்
செய்முறை
*கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக சுத்தம் செய்து கழுவி விட்டு தண்ணீர் ஊற்றி குறைந்தபட்சம் 5 முதல் 6 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.
*இப்போது ஊற வைத்த கம்பு, உளுந்து மற்றும் வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளுங்கள்.
*தண்ணீர் அதிக அளவு சேர்க்கக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
*அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து புளிப்பதற்கு வைத்து விடலாம்.
*இதனை மூடி போட்டு ஒரு நாள் இரவு அல்லது 8 மணி நேரத்திற்கு புளிக்க வைக்கவும்.
*ஊற வைத்த மாவை நன்றாக கலந்து தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: தலைவலி, உடல் வலி அம்புட்டும் மாயமா மறைந்து போக பாடி மசாஜ்!!!
*இப்போது இதில் 2 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் இஞ்சி, 3 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கிளறவும்.
*இப்போது தோசை கல்லை அடுப்பில் வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து தோசை கல் காய்ந்தவுடன் அதில் தேவையான அளவு மாவை ஊற்றி விரித்து சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும்.
*இரு பக்கங்களும் வெந்தவுடன் தேங்காய் சட்னி வைத்து சூடாக பரிமாறவும்.