இந்த மாதிரி பருப்பு ரசம் வச்சா குழம்பு கூட வைக்க வேண்டாம்…. ஈசியா வேலை முடிஞ்சுடும்!!!

Author: Hemalatha Ramkumar
12 June 2023, 11:07 am

பெரும்பாலான வீடுகளில் ரசம் இல்லாமல் இருக்காது. என்ன தான் குழம்பு வைத்தாலும் ரசம் போட்டு சாப்பிட்டால் தான் அன்றைய உணவு திருத்தியாக இருக்கும். பருப்பு ரசம் மற்ற ரச வகைகளில் இருந்து சற்று ருசியில் மாறுபடும்.‌ ரசம் சாப்பிடுவது செரிமானத்தை எளிதாக்கும். ரசத்தை அதிகம் கொதிக்க வைக்க கூடாது. பருப்பு ரசத்தை வெள்ளை சாதத்துடன் சேர்த்து ஏதேனும் ஒரு வகை வறுவல், பொரியல், அப்பளத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
சுவையான, கமகமக்கும் பருப்பு ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 3/4 கப்
புளி‌ – எலுமிச்சை பழ‌‌ அளவு
தக்காளி – 2
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
ரசப்பொடி – 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் – 1
பச்சைமிளகாய் – 1
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
கடுகு , உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
மிளகு – 1 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் ஒரு குக்கரில் துவரம்பருப்பு, தக்காளி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

*அடுத்ததாக ஒரு கிண்ணத்தில் புளியை ஊற வைத்து அது‌ நன்கு ‌ஊறியதும்‌ , கரைத்து அந்த புளி கரைசலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

*அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பச்சைமிளகாய், பூண்டு இவை அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*பிறகு வேக வைத்துள்ள துவரம்பருப்பு, தக்காளி இரண்டையும் கைகளால் நன்றாக மசித்து, புளி கரைசலுடன் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

*பின்பு அந்த கலவையுடன் கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை, மஞ்சள்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

*பின்பு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம் கலவையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட வேண்டும்.

*இந்த தாளிப்பை கரைத்து வைத்துள்ள புளி மற்றும் பருப்பு கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

*பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பருப்பு ரசம் நுரைத்து வந்ததும், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!