கிரிஸ்பி டேஸ்டி மைசூர் மசால் தோசை ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
19 December 2024, 7:44 pm

தோசை என்றாலே பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு. அதிலும் மசால் தோசை என்றால் சொல்லவா வேண்டும். மசால் தோசையை இன்னும் சற்று வித்தியாசமான சுவையில் மைசூர் மசால் தோசை ரெசிபியை தான் இன்று நாம் பார்க்க போகிறோம். இந்த மசால் தோசைக்கு தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் அருமையான காம்பினேஷனாக இருக்கும். இந்த மைசூர் மசால் தோசை செய்வதற்கான ஸ்பெஷல் தோசை மாவை நாம் தயார் செய்ய வேண்டும். இப்போது சுவையான மற்றும் கிரிஸ்பியான மைசூர் மசால் தோசை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்கு:

பெரிய வெங்காயம் – 2

உருளைக்கிழங்கு – 3

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 

இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் 

கடுகு உளுத்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் – 1/4 டேபிள் ஸ்பூன் 

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – 1 கொத்து

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை 

உப்பு – தேவையான அளவு

ரெட் சட்னி தயார் செய்வதற்கு: 

பெரிய வெங்காயம் – 2

வரமிளகாய் – 4 

பூண்டு பல் –2

கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் 

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு 

உப்பு – தேவையான அளவு

தோசை மாவு செய்வதற்கு:

வழக்கமாக நீங்கள் தோசை மாவு எப்படி அரைப்பீர்களோ அவ்வாறு அரைத்து 10 மணி நேரம் புளிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்

செய்முறை 

முதலில் உருளைக்கிழங்கு மசாலா தயார் செய்வதற்கு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கவும். இதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இந்த மசாலாவுக்கு தேவையான உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்குங்கள். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போன பிறகு லேசாக தண்ணீர் தெளித்து வேகவைத்து தோல் உரித்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும். 

இதையும் படிக்கலாமே: வயிறும் நிரம்பும், வெயிட் லாஸும் நடக்கும்… ஒரே கல்லில் இரண்டு மாங்காய்னா இது தானா…???

இறுதியாக சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டால் உருளைக்கிழங்கு மசாலா தயார். அடுத்து ரெட் சட்னி தயார் செய்வதற்கு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடலை பருப்பு சேர்த்து குறைவான தீயில் வறுக்கவும். கடலை பருப்பு பொன்னிறமாக வறுபட்டதும் அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 

அடுத்ததாக வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பொருட்கள் அனைத்தும் பொன்னிறமாக மாறியவுடன் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கூடுதலாக புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளலாம். மைசூர் மசால் தோசை செய்வதற்கு தோசை கல்லை அடுப்பில் வைத்து 2 கரண்டி மாவு ஊற்றி மெல்லிசாக விரித்துக் கொள்ளுங்கள். 

இப்போது ஒரு ஸ்பூன் அளவு ரெட் சட்னி எடுத்து சமமாக தோசை மீது பரப்பவும். ஓரங்கள் மற்றும் தோசையின் மீது எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும். அடுத்து நாம் தயார் செய்து வைத்த  உருளைக்கிழங்கு மசாலாவை தோசையின் ஒரு புறத்தில் மட்டும் வைக்கவும். தோசை பொன்னிறமாக மாறியவுடன் சூடாக தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும். தேவைப்பட்டால் இதில் நீங்கள் வேகவைத்த பட்டாணி, கேரட் போன்ற காய்கறிகளையும் உருளைக்கிழங்கு மசாலா செய்யும்பொழுது சேர்த்துக்கொள்ளலாம்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!