கொத்தமல்லி சாதம்: இந்த மாதிரி டேஸ்ட்டா இதுவரை செய்திருக்கவே மாட்டீங்க!!!
Author: Hemalatha Ramkumar4 January 2025, 7:29 pm
குழந்தைகளோ பெரியவர்களோ யாராக இருந்தாலும் கீரை சாப்பிட வைப்பது கஷ்டம் தான். ஆனால் அதே கீரையை சற்று வித்தியாசமாக டேஸ்டாக செய்து கொடுத்தால் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் மணக்க மணக்க கொத்தமல்லி சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்கப் போகிறோம். இது குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் மற்றும் பயணத்தின் போது எடுத்து செல்வதற்கு அருமையான உணவாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இதற்காக நாம் தயார் செய்யும் மசாலாவை அதிக அளவில் செய்து நீங்கள் ஃப்ரீசரில் ஸ்டோர் செய்து வைக்கலாம். லன்ச் செய்யப் போகும் சமயத்தில் அதனை எடுத்து சூடாக்கி சாதத்தோடு கிளறி கொடுத்து விடலாம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி தழை – 1/2 கட்டு
சின்ன வெங்காயம் – 15
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – ஒரு பெரிய துண்டு
எலுமிச்சை பழம் – 1/2 மூடி
கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 1
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 5
வரமிளகாய் – 3
வேர்க்கடலை – 1/2 கப்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
செய்முறை
*முதலில் கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து வேர்களை அகற்றி கிள்ளி எடுத்துக் கொள்ளலாம்.
*இதனோடு உரித்த சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
*இந்த மசாலா அரைக்கும்போது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
*தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
*இப்போது கடாயில் எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கி முதலில் வேர்க்கடலையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
*வேர்க்கடலை ஒரு நிமிடத்திற்கு வறுபட்டவுடன் அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.
இதையும் படிக்கலாமே: வெள்ளை சர்க்கரைக்கு பதிலா இந்த மாதிரி ஹெல்த்தி ஆப்ஷன் கூட யூஸ் பண்ணலாம்!!!
*அவை சிவந்து வறுப்பட்டவுடன் பட்டை, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து ஒரு சில வினாடிகளுக்கு வதக்கவும்.
*இப்போது வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
*தேவைப்பட்டால் முந்திரி பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
*இப்போது நாம் அரைத்து வைத்த கொத்தமல்லி பேஸ்ட்டை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்கவும்.
*இதனை மூடி வைத்து சமைக்க வேண்டாம்.
*தண்ணீர் அனைத்தும் வற்றி கெட்டியாகும் வரை சமைக்கவும்.
*தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
*சுவைக்காக 1/2 மூடி எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
*தொக்கு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடலாம்.
*இப்பொழுது கொத்தமல்லி தொக்கு தயாராக உள்ளது.
*வடித்த சாதத்தில் தேவையான அளவு தொக்கு எடுத்து கிளறி சூடாக பரிமாறவும்.