நண்டு மிளகு பிரட்டல் ரெசிபி: டேஸ்டு சும்மா அள்ளும்!!!
Author: Hemalatha Ramkumar6 December 2024, 7:42 pm
பொதுவாக மழைக்காலத்தில் சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவது வழக்கம். இதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும், ஒருவேளை பிரச்சனை ஏற்பட்டு விட்டால் அதிலிருந்து மீண்டு வருவதற்கும் நம்முடைய உணவில் ஒரு சில மாற்றங்களை செய்தாலே போதுமானது. அப்படி பார்க்கும் பொழுது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு அருமையான தீர்வாக அமையும் நண்டு மிளகு பிரட்டல் ரெசிபியை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
நண்டு – ஒரு கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
தேங்காய் -3 துண்டு
மிளகு – 2 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
அன்னாசி பூ – 1
கல் உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சமையல் எண்ணெய் – 2 குழி கரண்டி
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
நண்டு மிளகு பிரட்டல் செய்வதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு குழிக் கரண்டி அளவு சமையல் எண்ணெய் ஊற்றி 2 டேபிள்ஸ்பூன் மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும். பிறகு 3 பத்தை தேங்காய், 3 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து இரண்டு பெரிய வெங்காயத்தை ஸ்லைசாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இதனோடு வாசனைக்காக ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் வதங்கியவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்ததாக 2 பெரிய தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி, வெங்காயம், தேங்காய் ஆகிய பொருட்கள் நன்றாக வதங்கியவுடன் 2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள், 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கிளறவும்.
இதையும் படிச்சு பாருங்க: டயாபடீஸ் பிரச்சனைக்கு இவ்வளவு சிம்பிளா ஒரு தீர்வு இருக்கும்னு நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டீங்க!!!
இதனை 2 நிமிடங்களுக்கு வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து பொருட்களை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அதே கடாயில் ஒரு குழி கரண்டி அளவு கடலை எண்ணெய் சேர்த்து ஒரு சிறிய துண்டு பட்டை, 3 கிராம்பு, 3 ஏலக்காய், ஒரு அன்னாசி பூ, 1/2 டீஸ்பூன் சோம்பு சேர்த்து தாளித்துவிட்டு அரைத்த மசாலாவை நேரடியாக சேர்த்து கிளறவும்.
2 நிமிடங்கள் கழித்து மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அந்த தண்ணீரையும் ஊற்றிக் கொள்ளலாம். கொதி வந்தவுடன் ஒரு கிலோ சுத்தம் செய்து வைத்த நண்டு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 7 முதல் 8 நிமிடங்களுக்கு அடுப்பை குறைவான தீயில் வைத்து வேக வைத்துக் கொள்ளலாம்.
இறுதியாக 1/2 டீஸ்பூன் அளவு ஃபிரெஷாக அரைத்த மிளகுத்தூள் மற்றும் ஒரு கைப்பிடியளவு கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்.