மொறு மொறுவென்று ஃபிஷ் கட்லெட்: ஒரு முறை செய்து கொடுத்து விட்டால் மீண்டும் மீண்டும் வேண்டுமென்று அடம்பிடிப்பார்கள்!!!

Author: Hemalatha Ramkumar
17 December 2024, 6:14 pm

பொதுவாக கட்லெட் என்றாலே குழந்தைகளோ,  பெரியவர்களோ, அனைவருக்கும் பிடிக்கும். வெஜிடபிள் கட்லெட் செய்வது எளிது என்பதால் பலர் அதனை வீட்டில் செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் மீன் வைத்து கூட கட்லெட் செய்யலாம். இதனை செய்வது அவ்வளவு கஷ்டம் ஒன்றும் கிடையாது. எனவே இந்த பதிவில் ஃபிஷ் கட்லெட் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

மீன் – ஒரு கப் 

(வேக வைத்த அல்லது பொரித்தது) 

உருளைக்கிழங்கு – 2 வேக வைத்து தோல் உரித்து மசித்தது 

வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது 

கறிவேப்பிலை – ஒரு கொத்து பொடியாக நறுக்கியது  

சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் பொரிப்பதற்கு தேவையான அளவு 

கொத்தமல்லி தழை – 1/2 கப் பொடியாக நறுக்கியது 

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன் 

கரம் மசாலா – 1 டீஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு

பிரெட் தூள் – 1.5 கப் 

மைதா – 1/2 கப் 

சோள மாவு – 1/4 கப்

செய்முறை 

ஃபிஷ் கட்லெட் செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கிக் கொள்ளுங்கள். இப்போது மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 30 வினாடிகளுக்கு வேக வைக்கலாம்.

நமக்கு தேவையான மசாலா இப்போது தயாராக உள்ளது. அடுத்ததாக ஒரு அகலமான பவுலில் வேக வைத்து தோல் உரித்து மசித்த உருளைக்கிழங்கு, உதிர்த்துவிட்ட பொரித்த மீன்கள், கொத்தமல்லி தழை மற்றும் நாம் தயார் செய்த மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இப்போது கட்லெட்டுக்கு தேவையான மாவு தயாராக உள்ளது. இதனை சிறு சிறு அளவுகளாக எடுத்து உருண்டை பிடித்து தட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக, மைதா மாவு, சோள மாவு மற்றும் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் சேர்த்து பேஸ்டாக கலந்து கொள்ளவும். பிரெட் தூளை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். 

நாம் தட்டி வைத்துள்ள மாவை முதலில் மைதா பேஸ்டில் முக்கி எடுத்து பின்னர் பிரெட் தூளில் பிரட்டி எடுக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் இதனை 30 நிமிடங்களுக்கு ஃபிரிட்ஜில் வைக்கலாம். இல்லையெனில் உடனடியாக பொரித்து எடுக்கலாம். 

இப்போது ஒரு பெரிய வாணலில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் மிதமான அளவு சூடானதும் தயார் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக மாறியவுடன் பொரித்து எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயை வடிகட்டி விட்டு தட்டில் வைத்து கெட்சப் உடன் சூடாக பரிமாறவும்.

  • Jayam Ravi and Aarthi court case மீண்டும் சமரச பேச்சு…ரவி மோகன்-ஆர்த்தி வழக்கில் நடந்த திடீர் திருப்பம்..!