கீரைகளில் அதிக அளவு மருத்துவ குணங்ககள் நிறைந்த கீரை அகத்திக் கீரை ஆகும். அகத்தி செடியில் இலை மட்டுமின்றி பூ, பட்டை, வேர் மற்றும் காய் போன்றவைகளும் மருந்தாகப் பயன்படுகின்றன. இந்த அகத்திக் கீரையின் பயன்கள் குறித்து இங்கு காண்போம்.
அகத்திக் கீரையில் நார்ச்சத்து, கொழுப்புசத்து நீர்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை அடங்கி உள்ளன. வைட்டமின் சத்துக்கள் மற்றும் தயாமின், ரைபோப்ளேவின் போன்ற சத்துக்களும் அகத்திக் கீரையில் உள்ளன.
மேலும் கால்சியம் சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. எனவே இது பல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கு உதவுகிறது.
அகத்தி கீரையில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு, சிறுநீர் தடை இல்லாமல் செல்ல உதவுகிறது. அகத்திக் கீரை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், அதிகப்படியான உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி குணமடைகிறது.
அகத்திக்கீரை உடல் சோர்வை போக்கவும் வல்லது. மூளையானது மந்த நிலையில் இருப்பதால் சிலர் எப்போதும் சோர்வு மற்றும் ஞாபக திறன் குறைவாகவும் காணப்படுவர். இந்த வகை பிரச்சனைகள் உள்ளவர்கள் உணவில் அடிக்கடி அகத்திக்கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இவை முற்றிலும் குணமடைகிறது.
அகத்தி கீரை சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் உள்ள பித்தம் குறையும்.
அகத்திக் கீரையுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய், சந்தனம், மஞ்சள் ஆகியவை சேர்த்து நன்கு அரைத்து, இந்த சாறை சொறி, சிரங்கு, அழுக்கு தேமல், படர்தாமரை போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் தடவி வரும் பொழுது இவை குணமடைகிறது. மேலும் கால் பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் குணமாகின்றன.
இதில் வைட்டமின்- சி உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க கூடியது. வயது முதிர்ந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் இவர்கள் அகத்திக்கீரை தொடர்ந்து உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரிக்கிறது.
அகத்திக் கீரையில், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் இரத்த ஒட்டத்தை சீராக வைக்க உதவும். கர்ப்பிணி பெண்களுக்கு அதிக அளவில் இரும்பு சத்து தேவைப்படுவதால் இந்த கீரையை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பாலூட்டும் தாய்மார்களும் இதனை எடுத்துக் கொள்வதனால் பால் சுரப்பது தூண்டப்படுகிறது.
அகத்திக் கீரையை உண்ணும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த கீரையை வேறு ஏதேனும் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது சாப்பிடக் கூடாது. ஏனெனில் பிற மருந்தின் செயல் திறனை இது பாதிக்கிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.