நாம் அனைவரும் மஞ்சள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பல வகைகளில்
அறிந்திருப்போம். ஆனால் மஞ்சளில் கருமஞ்சள், வெள்ளை மஞ்சள் போன்ற வகைகள் இருப்பது பலருக்கு தெரியாது. பூலாங்கிழங்கு என அழைக்கப்படும் வெள்ளை மஞ்சள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் இப்போது அறிந்து கொள்வோம்.
வெள்ளை மஞ்சள் இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டது என்றாலும் ஆசியா, ஐரோப்பா போன்ற இடங்களிலும் விளைகிறது. இது பல நல்ல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. வழக்கமான மஞ்சளைப் போன்றே வெள்ளை மஞ்சளும் பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகையை சார்ந்தது. வெள்ளை மஞ்சள், கசப்பு சுவை கொண்டது. தற்போது மக்களிடையே இதன் பயன்பாடு பெருமளவில் குறைந்துவிட்டது.
வெள்ளை மஞ்சள் நல்ல இனிய நறுமணம் கொண்டதாகும் மற்றும் மிகச்சிறந்த கிருமிநாசினியாகவும் உள்ளது. எனவே தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
இது இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டின் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
பாசிப்பருப்பு, வெள்ளை மஞ்சள் மற்றும் கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து குளியல் பொடியாக தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நமது சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
வெள்ளை மஞ்சள் உடன் தயிர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வரும்போது கரும்புள்ளிகள்,பருக்கள் நீங்கி முகம் பளபளப்பாக மாறுகிறது.
வெள்ளை மஞ்சள் பொடியுடன் தேன் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தபின் கழுவி வந்தால் முகத்தில் வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கி அழகாகும் .
வெள்ளை மஞ்சள் பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு நீரில் போட்டு கொதிக்கவைத்து சூடு குறைந்த பின்னர் தேன் கலந்து பருகி வந்தால் வயிற்று புண் சரியாகும்.
நம் உடலில் ஏற்படும் காயங்களுக்கு, தீயினால் ஏற்படும் காயங்களுக்கு நல்ல மருந்தாக அமைகிறது. இது காயங்களால் ஏற்படும் தழும்புகளை மறைய வைக்கிறது.
வெள்ளை மஞ்சள் பொடி சிறிதளவு தேநீரில் கலந்து வைத்து வரும் போது கர்ப்பப்பை இறக்கம், கர்ப்பப்பை கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகள் போன்றவை குணமடைகிறது.
வெள்ளை மஞ்சள் நீண்ட காலமாக புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மஞ்சளில் உள்ள Curcuzedoalide எரிபொருள் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது. மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களைத் தடுப்பதில் வெள்ளை மஞ்சளின் சாறு பெரும் பங்கு வகிக்கிறது.
(எச்சரிக்கை: இதனை உணவு பொருள்களுடன் உண்ணும் போது பாகற்காய், அசைவ உணவுகள், நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்) போன்றவற்றை தவிர்ப்பது நல்லது).
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.