குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை சவால் இல்லாமல் பூப்போல கவனிக்க உதவும் குறிப்புகள்!!!
Author: Hemalatha Ramkumar21 November 2024, 7:00 pm
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பராமரிப்பது என்பது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல சவால்கள் நிறைந்தது. ஒருவேளை நீங்கள் குறைப்பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தையை சமாளிக்க தவித்து வரும் ஒரு புதிய பெற்றோராக இருந்தால் இந்த பதிவில் உள்ள குறிப்புகள் உங்களுடைய குட்டி செல்லத்தை கவனித்துக் கொள்வதற்கு நிச்சயமாக உதவும். 9 மாதங்கள் கர்ப்பத்தை நிறைவு செய்வதற்கு முன்பு பிறக்கும் குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்ததாக கருதப்படுகின்றன. எதிர்பார்த்த நேரத்திற்கு முன்பே அவர்கள் பிறந்து விடுவதால் குழந்தையின் உடல் முழு வளர்ச்சி அடைந்திருக்காது. தாய் மற்றும் தகப்பனின் வயது, புகைபிடித்தல், அளவுக்கு அதிகமான மன அழுத்தம், ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கருவில் சுமத்தல் (டிவின்ஸ், டிரிப்லட்ஸ்), உயர் ரத்த அழுத்தம், தொற்றுகள் அல்லது டயாபடீஸ் போன்றவை காரணமாக குறை பிரசவம் ஏற்படலாம். குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் உறுப்புகள் பெரும்பாலும் முழுமையான வளர்ச்சி அடைந்து இருக்காது.
மேலும் சுவாசித்தல், பால் குடித்தல், தொற்றுகளை எதிர்த்துப் போராடுதல், உடல் வெப்பநிலையை சீராக்குதல் போன்ற அடிப்படை செயல்பாடுகளே அவர்களுக்கு சவாலானதாக இருக்கும். மேலும் அவர்கள் அடிக்கடி தொற்றுகள் மற்றும் சுவாச பிரச்சனைகள், மஞ்சள் காமாலை, ரத்த சோகை, இரைப்பை குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு ஆளாகலாம். இதனால் அவர்களுக்கு வழக்கமாக பிறக்கும் குழந்தைகளை விட கூடுதல் பராமரிப்பு கொடுப்பது அவசியம். எனவே உங்கள் குழந்தையை கவனிக்க உதவும் சில முக்கியமான குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
கங்காரு பராமரிப்பு
கங்காரு பராமரிப்பு என்பது தோலுக்கு தோல் தொடர்பு ஏற்படுத்தும் ஒரு பயிற்சியாகும். இதில் உங்கள் உடலுக்கு நெருக்கமாக குழந்தையை தூக்கிப் பிடித்துக் கொள்வது அவர்களுடைய உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு மற்றும் சுவாசித்தல் செயல்முறையை சீராக்கும். மேலும் கங்காரு பராமரிப்பு பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளிடையே ஒரு உணர்வுபூர்வமான பந்தத்தை வலுப்படுத்துகிறது. கங்காரு பராமரிப்பை அம்மாதான் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது குழந்தையின் அப்பாவும் அதே மாதிரியான பராமரிப்பை குழந்தைக்கு வழங்கலாம்.
இதையும் படிக்கலாமே: பெண் குழந்தைகள் விரைவாக பூப்படை ஸ்மார்ட்போன் காரணமா… திடுக்கிட வைக்கும் ஆய்வு தகவல்!!!
கதகதப்பான மற்றும் அமைதியான சூழல்
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பொதுவாக அதிக சத்தம் மற்றும் வெப்பநிலை மாற்றங்களுக்கு அதிக சென்சிட்டிவாக இருப்பார்கள். எனவே அவர்கள் இருக்கும் அறை அதிக சூடாகவோ அல்லது குளிராகவோ இல்லாமல் கதகதப்பாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி சத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி குழந்தையை பார்ப்பதற்கு யாரையும் அனுமதிக்க வேண்டாம். எனவே குழந்தைக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான ஒரு சூழலை உருவாக்கி கொடுங்கள்.
சரியாக தாய்ப்பால் கொடுத்தல்
தாய்ப்பால் என்பது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்ச்சிக்கு உதவும். ஒருவேளை உங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் ஏதேனும் சவால்கள் இருந்தால் உடனடியாக வழிகாட்டுதலுக்கு ஒரு மருத்துவரை அணுகவும்.
சுகாதார பயிற்சிகள்
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு மிகவும் வலுவிழந்து இருக்கும். எனவே அவர்கள் எளிதாக தொற்றுகளுக்கு ஆளாகலாம். ஆகவே குழந்தையை கையாளுவதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவுதல் அல்லது சானிட்டைசர் பயன்படுத்துதல் போன்ற தனிநபர் சுகாதாரத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும். மேலும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குழந்தை இருக்கும் அறைக்குள் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். குழந்தை இருக்கும் சூழலையும் சுத்தமாக பராமரித்தல் அவசியம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.