மனதில் தொடங்கி உள்ளுறுப்புகள் வரை அனைத்தையும் வலுப்படுத்தும் பாலாசனம்!!!
Author: Hemalatha Ramkumar11 October 2022, 1:54 pm
ஒரு குழந்தையானது தனது இரு கால்களையும் மடக்கியவாறு, குப்புறப்படுத்து கொண்டிருப்பது போல காட்சியளிக்கும் பாலாசனம் என்பது குழந்தையின் போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் தொடைகளில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும் இது முதுகு, தோள்பட்டை, கழுத்து மற்றும் இடுப்பு வலியைப் போக்க பயனுள்ளதாக இருக்கும். பாலாசனம் செய்வது உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியிலான நிவாரண உணர்வைத் தூண்டுகிறது.
இருப்பினும் உங்களுக்கு வயிற்றுப்போக்கு இருந்தாலோ அல்லது கர்ப்பமாக இருந்தாலோ இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்கவும். அனுபவமிக்க பயிற்சியாளரின் முன்னிலையில் பாலாசனம் செய்யப்பட வேண்டும். மேலும் இடுப்பு அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் அல்லது அமில வீக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த ஆசனத்தை சிறிது மாற்றத்துடன் பயிற்சி செய்யலாம். உங்கள் முழங்கால்களை ஒன்றாகக் கொண்டுவருவதற்குப் பதிலாக, உங்கள் பெருவிரல்களைத் தொட்டு, உங்கள் முழங்கால்களை குறைந்தபட்சம் இடுப்பின் தூரத்தில் வைத்து பயிற்சி செய்யலாம்.
பாலாசனம் செய்வதன் நன்மைகள்:
*முதுகு, தோள்பட்டை மற்றும் மார்பில் உள்ள பதற்றத்தை விடுவிக்கிறது
* உங்களுக்கு மயக்கம் அல்லது சோர்வு இருந்தால் இந்த ஆசனம் சிறந்தது
* மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்க உதவுகிறது
*உடலின் உள்ளுறுப்புகளை வளைத்து, மிருதுவாக வைக்கிறது
*இது முதுகுத்தண்டை நீட்சி அடையச் செய்கிறது
*கழுத்து மற்றும் கீழ் முதுகுவலியைக் குறைக்கிறது
*இது இடுப்பு, தொடைகள் மற்றும் கணுக்கால்களை மெதுவாக நீட்சி அடையச் செய்கிறது
*உடல் முழுவதும் சுழற்சியை சீராக்கும்
*இது முழங்காலில் உள்ள தசைகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்களை நீட்சி அடையச் செய்கிறது
* மனதையும் உடலையும் அமைதிப்படுத்துகிறது
* வலுவான மற்றும் நிலையான சுவாசத்தை ஊக்குவிக்கிறது