கருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்: கொடூரமான இந்த நோயை பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!!!
Author: Hemalatha Ramkumar16 September 2024, 11:09 am
செப்டம்பர் மாதம் கருப்பை புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு புற்றுநோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இப்படிப்பட்ட ஒரு முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அந்த நோயின் தீவிரத்தை நிச்சயமாக நீங்கள் அறிந்திருக்க வேண்டும். கருப்பை புற்றுநோய் என்பது பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கும், சிறந்த சிகிச்சை அளிப்பதற்கும் இது குறித்த விழிப்புணர்வு பெண்களிடையே கட்டாயம் இருக்க வேண்டும். எனவே கருப்பை புற்றுநோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
கருப்பை புற்றுநோயை புரிந்து கொள்ளுதல்
அண்டகத்தில் அசாதாரணமான செல் வளர்ச்சி ஏற்படுவதே கருப்பை புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆரம்ப நிலைகளில் எந்த ஒரு குறிப்பிட்ட அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. இதன் காரணமாக இந்த புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் அறிந்து கொள்வது சவாலாக திகழ்கிறது. பெரும்பாலும் கருப்பை புற்றுநோய் அதன் இறுதி நிலையிலே கண்டறியப்படுகிறது. இதன் காரணமாகவே கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் உயிர் வாழும் விகிதம் மிகக் குறைவாக உள்ளது.
கருப்பை புற்றுநோயின் வகைகள்
கருப்பை புற்றுநோயில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில் ஏபிதீலியல் டியூமர் (மிகவும் பொதுவான வகை), ஜெர்ம் செல் டியூமர் மற்றும் ஸ்ட்ரோமல் ட்யூமர் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு வகை புற்றுநோயின் உருவாக்கமும் அதன் தன்மையும் வேறுபடுகிறது. இதன் காரணமாக அவற்றிற்கு வழங்கப்படும் சிகிச்சை முறையும் மாறுபடுகிறது. கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பெண்கள் அறுவை சிகிச்சை அல்லது கிமோதெரபிக்கு பிறகு முழுமையாக குணமடைகின்றனர்.
கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள்
அடிவயிற்றில் உப்புசம், இடுப்பு எலும்பு பகுதியில் வலி, கீழ் முதுகில் வலி, திடீரென்று உடல் எடை குறைதல், சாப்பிடுவதில் சிக்கல், மாதவிடாயில் மாற்றங்கள், பிறப்பு உறுப்பில் எதிர்பாராத வகையில் ரத்தம் கசிதல், குமட்டல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள். ஆனால் இந்த அறிகுறிகள் பிற குறைவான தீவிரமுள்ள பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் போலவே இருப்பதால் பெரும்பாலான சமயத்தில் இந்த கருப்பை புற்றுநோயானது அதன் இறுதிக்கட்ட நிலையிலே கண்டறியப்படுகிறது.
அபாய காரணிகள்
கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு அபாய காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் மரபணு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. BCRA1 மற்றும் BCRA2 ஜீன்கள் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பெண்கள் 55 வயதை கடந்தவர்களாக உள்ளன. புகைப்பிடித்தல் கருப்பை புற்றுநோய்க்கான மிக முக்கியமான ஒரு அபாய காரணி. ஏற்கனவே கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ரத்த சொந்தம் அல்லது குடும்ப உறுப்பினர் இருக்கும் பட்சத்தில் அது உங்களுக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் நீங்கள் ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் சிகிச்சை செய்திருந்தால் உங்களுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. இது ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது. மாதவிடாய் சிறு வயதிலேயே ஆரம்பிப்பது அல்லது மெனோபாஸ் தாமதமாக ஏற்படுவது ஆகிய இரண்டுமே கருப்பை புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கும். உடல் எடை அதிகமாக இருப்பதும் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
கருப்பை புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை
கருப்பை புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிவது சற்று சவாலான விஷயமாக தொடர்ந்து இருந்து வருகிறது. எனினும் கருப்பை புற்றுநோய் இருப்பதாக சந்தேகித்தால் மருத்துவர்கள் அதற்கு பெல்விக் சோதனை, அல்ட்ரா சவுண்ட் இமேஜ் மற்றும் ரத்த சோதனை போன்ற சோதனைகளை செய்வார்கள். ஒருவேளை கருப்பை புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டால் அதற்கு பயாப்ஸி அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும். நோய்க்கான சிகிச்சை என்பது அது கண்டறியப்படும் நிலை மற்றும் நோயின் வகையை பொறுத்து அமையும்.
0
0