திருமணமான பெண்கள் இந்த வாழ்க்கை முறை டிப்ஸ் ஃபாலோ பண்ணா ஈசியா கன்சீவ் ஆகிடலாம்!!!
Author: Hemalatha Ramkumar6 September 2024, 3:44 pm
தாய்மை என்பது பெண்களுக்கு கிடைத்த ஒரு வரம். எனினும் கர்ப்ப காலம் என்பது அவ்வளவு எளிதானது கிடையாது. பல பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனைகளை அனுபவித்து வருகின்றனர். இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பழக்க வழக்கங்கள் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கருத்தரிப்பதில் வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சில வாழ்க்கை முறை பழக்கங்கள் பெண்கள் கருத்தரிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பதிவில் கருத்தரிப்பதில் பிரச்சனைகளை அனுபவித்து வரும் பெண்களுக்காக ஒரு சில குறிப்புகளை பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவை சாப்பிடவும்
நீங்கள் கருத்தரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் மருந்துகள் சாப்பிடுவது ஒருபுறம் இருந்தாலும் நீங்கள் நான்கு முக்கியமான விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒன்று நீங்கள் ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். எதற்காகவும் உங்களது உணவில் சமரசம் செய்ய வேண்டாம். இதற்காக நீங்கள் எப்பொழுதும் சாலட் போன்ற உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. முதலில் வெளி உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் வெளி உணவுகளில் அதிக பிரிசர்வேட்டிவ்கள், மைதா அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவுகள் சேர்க்கப்பட்டிருக்கும்.
இது உங்களுடைய ஆரோக்கியம் மற்றும் கருத்தரிக்கும் திறனை பாதிக்கும். எப்பொழுதும் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடவும். உங்களுடைய உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும். சாதத்திற்கு பதிலாக அதிக காய்கறிகள் சாப்பிடுங்கள். பருவ கால உணவுகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தினமும் உடற்பயிற்சி செய்யவும்
பொதுவாகவே அனைவரும் வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உடற்பயிற்சி செய்வதற்கான ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒவ்வொரு நாளும் ஒதுக்கங்கள். 40 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடவும். அந்த 40 நிமிடங்களில் 15 நிமிடங்களுக்கு ஏரோபிக் பயிற்சிகளையும், மீதமிருக்கக்கூடிய 30 நிமிடங்களில் வாக்கிங் அல்லது யோகா போன்றவற்றை செய்யுங்கள்.
நல்ல தூக்க அட்டவணையை பின்பற்றவும்
பெண்களின் உடலானது எப்பொழுதும் இயற்கையோடு ஒத்திசைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே நீங்கள் இயற்கைக்கு எதிராக சென்றால் அது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். பகல் நேரத்தில் தூங்கி இரவு நேரத்தில் நீங்கள் விழித்திருக்கும் பொழுது அது உங்களுடைய ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்கும். இதன் காரணமாகவே பல பெண்களில் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. எனவே இரவு சரியான நேரத்திற்கு தூங்க செல்லுங்கள். ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழவும். குறைந்தபட்சம் 8 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.
மன அழுத்தத்தை குறைக்கவும்
நீங்கள் கருத்தரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் கட்டாயமாக நீங்கள் எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் ரிலாக்ஸாக இருக்க வேண்டும். மெடிடேஷன், யோகா அல்லது உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை செய்வதன் மூலமாக மன அழுத்தத்தில் இருந்து விடுபடுங்கள். ஆடல், பெயிண்டிங் அல்லது உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யுங்கள். உங்களுக்காக நேரத்தை செலவிடவும். இந்த விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் செய்யும் பொழுது உங்களுடைய ஹார்மோன்கள் சீராக இருக்கும். மேலும் நீங்கள் எளிதாக கருத்தரிப்பதற்கு இவை உதவும்.