சுடச்சுட டீ, காபி குடிப்போருக்கு கேன்சர் எச்சரிக்கை விடுத்த புதிய ஆய்வு!!!

Author: Hemalatha Ramkumar
28 November 2024, 2:26 pm

நம்மில் பலருக்கு டீ காபியை சுட சுட குடித்தால் தான் குடித்த திருப்தி கிடைக்கும். இதனால் நாக்கு வெந்து போனாலும் பரவாயில்லை, எனக்கு சூடாக தான் டீ வேண்டும் என்று அடப்பிடிப்பவர்களும் உண்டு. ஆனால் டீ, காபி மற்றும் உணவுகளை அளவுக்கு அதிகமாக சூடாக சாப்பிடுவது எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? 

டீ அல்லது காபி போன்ற பானங்களை அளவுக்கு அதிகமாக சூடாக சாப்பிடுவது புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக சூடாக உள்ள பானங்கள் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்க்கு இடையே உள்ள தொடர்பு இந்த ஆய்வு மூலமாக மதிப்பீடு செய்யப்பட்டது. அந்த பானங்களில் உள்ள பொருட்கள் எதுவும் நேரடியாக புற்று நோய்க்கு தொடர்புடையதாக இல்லாவிட்டாலும் கூட, அதன் அளவுக்கு அதிகமான வெப்பநிலையே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. 

அடிக்கடி அல்லது தினமும் டீ, காபியை வழக்கத்தை விட அதிகமான வெப்ப நிலையில் பருகுவது நிச்சயமாக உணவு குழாய் புற்றுநோயை ஏற்படுத்தலாம். எனினும் இது சம்பந்தமான கூடுதல் ஆய்வு என்னும் தேவைப்படுகிறது. நாம் ஏதாவது சூடாக குடிக்கும் பொழுதோ அல்லது சாப்பிடும் பொழுதோ நம்முடைய வாயை வயிற்றுக்கு இணைக்கும் உணவு குழாயின் ஓரங்கள் அந்த சூட்டை எடுத்துக் கொள்கின்றன. நாளடைவில் அளவுக்கு அதிகமான வெப்ப நிலைகளை உணவு குழாய்க்கு நாம் கொடுக்கும் பொழுது அதனால் நாள்பட்ட வீக்கம், செல்லுலார் சேதம் மற்றும் நாளடைவில் அது புற்றுநோய் உருவாக காரணமாக அமைகிறது. 

இதையும் படிக்கலாமே: கண் இமைகளில் கூட பொடுகு வருமா… அலட்சியமா இருந்துடாதீங்க!!!

இந்த செயல்முறை படிப்படியாகவே நிகழ்கிறது. அதிகமான வெப்பநிலை நாள்பட்ட வீக்கம் மற்றும் சேதத்திற்கு வழிவகுத்து மெதுமெதுவாக புற்றுநோய் உருவாக்கத்தில் விளைகிறது. சூடான டீ, காபி குடிப்பது உடனடியாக நமக்கு புற்றுநோயை ஏற்படுத்தாது. நீண்ட நாட்களாக உங்களுக்கு டீ மற்றும் காபியை சூடாக குடிக்கும் பழக்கம் இருந்தால் நாளடைவில் அது புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்த செயல்முறை நடைபெறுவதற்கு பல வருடங்கள் ஆகலாம். 

தொடர்ச்சியாக உணவு குழாயில் அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் காயம் இயற்கையான குணமடையும் செயல்முறை சீராக நடைபெற விடாமல், செல்களின் அசாதாரணமான வளர்ச்சி ஏற்பட்டு, அது கேன்சர் செல்களை உருவாக்குகிறது. அதுமட்டுமல்லாமல் காபியோடு புகைபிடித்தல் மற்றும் அதிக சாச்சுரேட்டட் கொழுப்பு கொண்ட அசைவ உணவு ஆகியவையும் கேன்சரோடு தொடர்புடையதாக அமைகிறது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் உடற்பருமன் ஆகியவை உணவு குழாய் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம். 

சிறிய மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் 

டீ, காபி அல்லது உணவு ஆகியவை நேரடியாக புற்றுநோயுடன் தொடர்புடையதாக இல்லை. மாறாக, அதன் வெப்பநிலையே மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக நீங்கள் சூடான உணவுகளை குடித்தாலோ அல்லது சாப்பிட்டாலோ அது உங்களுடைய உணவுக் குழாயை பாதித்து நாளடைவில் அதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. எனினும் உங்களுடைய உணவுக் குழாயை பாதுகாப்பதற்கு நிபுணர்கள் அங்கீகரித்த ஒரு சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம். 

*டீ அல்லது காபியை ஒரு ஓரிரு நிமிடங்கள் ஆற வைத்து குடிப்பது நல்லது. 

*பானங்களை சூடாக குடிப்பதற்கு பதிலாக வெதுவெதுப்பான பதத்தில் குடித்து பழகுங்கள். 

*புகைப்பிடிப்பதை முற்றிலுமாக தவிர்த்தல், மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுதல் மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல் ஆகியவை உணவு குழாய் புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான அபாயத்தை குறைக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Kumbh Mela Monalisa Was she sexually harassed by the arrested director கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?