ஹார்ட் அட்டாக் பின்னணியில் இருக்கும் இனிப்பு பானங்கள்… உஷாரா இருக்கணும்!!!
Author: Hemalatha Ramkumar12 December 2024, 6:01 pm
இன்றைய புதுயுகத்தின் உட்கார்ந்த வாழ்க்கை முறை உலக அளவில் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. டயாபடீஸ், உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம் முதல் ஹார்ட் அட்டாக் வரை இவை அனைத்துமே தற்போது வயது சம்பந்தப்பட்ட நோயாக இல்லை. சமீப சில வருடங்களாகவே இளைஞர்களும் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமான உணவு இவை அனைத்தையும் சமாளிப்பதற்கான ஒரு எளிமையான வழியாக அமைகிறது. பெரும்பாலும் நம்முடைய தாகத்தை தணிப்பதற்கு அல்லது கொண்டாட்டத்தின் பெயரிலோ சர்க்கரை நிறைந்த பானங்களை அடிக்கடி பருகி வருகிறோம்.
ஆனால் இந்த இனிப்பு பானங்கள் அதிக தீங்கு விளைவிக்க கூடியவை. இவற்றை அடிக்கடி குடிப்பது பக்கவாதம், இதய செயலிழப்பு போன்ற இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் அதிக அளவு சேர்க்கப்பட்ட சர்க்கரை சாப்பிடுவதாலும் பக்கவாதம் ஏற்படலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது. ஆயினும் இவற்றை குறைவாக சாப்பிடுவதால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். சர்க்கரை நிறைந்த பானங்களை குடிப்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கு சர்க்கரையின் எந்த ஒரு வடிவத்தை காட்டிலும் மிக மோசமானதாக அமைகிறது.
ஏன் சர்க்கரை கலந்த பானங்கள் தீங்கு விளைவிக்க கூடியவையாக இருக்கின்றன?
இனிப்பூட்டப்பட்ட பானங்களில் காணப்படும் திரவ சர்க்கரை பொதுவாக திட வடிவத்தோடு ஒப்பிடும் பொழுது குறைவான திருப்தியை தருகிறது. இதனால் நாம் அதிக அளவு உணவு சாப்பிடுவதற்கு தூண்டப்படுகிறோம். சர்க்கரை சாப்பிடுவது இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை எப்படி பாதிக்கும் என்பதை புரிந்து கொள்வதற்காக ஸ்வீடனை சேர்ந்த ஆராய்ச்சி குழு 69,705 நபர்களின் மாதிரிகளை இந்த ஆய்வுக்காக சேகரித்தனர்.
இதையும் படிச்சு பாருங்க: இந்தப் பழக்கங்களை ரெகுலரா ஃபாலோ பண்றவங்க எப்போதும் இளமையா தெரியுவாங்க!!!
இதில் தேன், பாஸ்டரி அல்லது ஃபிரிஸ் டிரிங்குகள் போன்ற இனிப்பூட்டப்பட்ட பானங்கள் மற்றும் ஏழு விதமான இதய நோய்கள் இடையே உள்ள தொடர்பு மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் இரண்டு வகையான பக்கவாதம், ஹார்ட் அட்டாக், இதய செயலிழப்பு போன்றவை அடங்கும். 25,739 நபர்களை 10 வருடங்கள் கண்காணித்த போது அவர்களுக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதிக அளவு சர்க்கரை சாப்பிடுவது இதய செயலிழப்பை ஏற்படுத்தியது. எனவே சர்க்கரை பானங்களை அடிக்கடி பருகுவதை கைவிடுவது நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
எனினும் இந்த ஒரு ஆய்வு முடிவுகளை மட்டும் வைத்து எந்த ஒரு முடிவுக்கும் வர இயலாது. இது குறித்த கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது. ஆனாலும் கூட சர்க்கரை நிறைந்த பானங்கள் நம்முடைய உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எனவே எப்பொழுதும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபிரெஷ் ஜூஸை பருகுவது சிறந்தது. மேலும் சர்க்கரைக்கு பதிலாக இயற்கை இனிப்பான்களை பயன்படுத்துவது இன்னும் கூடுதல் நன்மைகளை அளிக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.