இதய நோய் இருப்பதை உணர்த்தும் முக்கியமான அறிகுறிகள்… இவற்றை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீங்க!!!
Author: Hemalatha Ramkumar1 October 2024, 3:26 pm
இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் பொழுது அதற்கான அறிகுறிகளை நம்முடைய உடல் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தும். இந்த அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொள்வதன் மூலமாக நம்முடைய இதயத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள இயலும். சோர்வு, நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிக்கல், வியர்வை போன்ற அறிகுறிகளை நாம் அலட்சியப்படுத்தி விட்டால் அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். பொதுவாக இதய சம்பந்தப்பட்ட நோய்கள் என்பது கொஞ்சம் கொஞ்சமாகவே தீவிரமாக ஆரம்பிக்கும். ஆரம்ப கட்டத்தில் அதன் அறிகுறிகளை வெளிப்படுத்துவது அரிது.
இதனால் பெரும்பாலான நேரங்களில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அதன் ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது சிக்கல் ஏற்படுகிறது. எனவே நமக்கு ஏற்படக்கூடிய சிறிய வகையிலான ஒரு அசௌகரியத்தை கூட வீட்டு வைத்தியங்கள் மூலமாக சிகிச்சை அளித்துவிட்டு அவற்றை அலட்சியமாக கருத வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு செய்வதன் மூலமாக ஹார்ட் அட்டாக் அல்லது பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கலாம். எனவே இந்த பதிவில் இதய நோய் இருப்பதை உணர்த்தும் ஒரு சில அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சோர்வு
உங்களுக்கு வழக்கத்தைவிட அதிக அளவு சோர்வு ஏற்பட்டு, ஒரு விதமான வலுவிழந்து இருக்கும் உணர்வு ஏற்பட்டால் அதனை நீங்கள் அலட்சியமாக கருதக்கூடாது. போதுமான அளவு ஓய்வு அல்லது தூக்கம் பெற்ற பிறகும் இந்த அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக இதனை நீங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். படி ஏறுவது அல்லது நடப்பது போன்ற எளிமையான வேலைகளை செய்வதில் கூட உங்களுக்கு பெரிய அளவு சிக்கல் இருக்கிறது என்றால் அதனை அலட்சியமாக விட்டு விடாதீர்கள்.
நெஞ்சு வலி
நெஞ்சு வலி என்பது ஒரு நபருக்கு ஏற்பட்டு இருக்கும் நிலையை பொறுத்து நபருக்கு நபர் மாறுபடலாம். நெஞ்சை யாரோ இறுக்கிப் பிடிப்பது, வலி மற்றும் அங்கு அழுத்தம் ஏற்படுவது போன்ற பல்வேறு மாதிரியான நெஞ்சு வலிகள் உள்ளன. தங்களுடைய நெஞ்சில் ஏதோ ஒரு கனமான பொருளை எடுத்து வைத்தது போன்ற உணர்வு ஒரு சிலருக்கு ஏற்படலாம். இது அடிக்கடி மற்றும் ஒரு சில நிமிடங்கள் அல்லது ஒரு சில மணி நேரங்களுக்கு நீடிக்கும்.
மூச்சு விடுவதில் சிக்கல்
நீங்கள் ஓய்வில் இருந்தாலோ அல்லது ஏதேனும் வேலை செய்து கொண்டிருந்தாலோ மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படலாம். ஒரு சில சமயங்களில் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுடைய இதயத்திற்கு போதுமான அளவு ரத்தம் உந்தித் தள்ளப்படாததற்கான ஒரு அறிகுறி இது. பெரும்பாலான நேரங்களில் நெஞ்சு வலியுடன் சேர்ந்து மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
சீரற்ற இதயத்துடிப்பு
இது அரித்மியா என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் உங்களுடைய இதயம் விட்டுவிட்டு துடிப்பது போல அல்லது அதி வேகமாக துடிப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது மாதிரியான சீரற்ற இதயத்துடிப்பு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான மிக முக்கியமான ஒரு அறிகுறி. இதனால் பக்கவாதம், இதய செயலிழப்பு அல்லது ஆஞ்சீனா போன்றவை ஏற்படலாம்.
கால்களில் வீக்கம்
ஒரு சிலருக்கு முட்டி அல்லது கால்களில் வீக்கம் ஏற்படுவதும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அந்த இடத்தில் அசௌகரியம் ஏற்பட்டு நடப்பதில் சிக்கல் உண்டாகிறது. இதயத்திற்கு ரத்தம் சரியாக உந்தி தள்ளப்படாத போது இந்த வகையான வீக்கம் ஏற்படுகிறது. உடலில் திரவம் வெளியேற்றப்பட முடியாமல் உடலில் சேமிக்கப்படும் பொழுது இந்த வீக்கம் உண்டாகும். இது இதய செயலிழப்பு அல்லது பிற இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்படலாம்.
தோள்பட்டை, தாடை மற்றும் கழுத்து வலி
ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு முன்பு தோள்பட்டை வலி, தாடையில் வலி மற்றும் கழுத்து வலி போன்றவற்றை பெரும்பாலானவர்கள் அனுபவிக்கிறார்கள். இது மிக முக்கியமான அறிகுறியாக கருதப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் தாமதிக்காமல் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.