இரவு மேக்கப்பை அகற்றும் போது மறக்காம இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணிக்கோங்க!!!
Author: Hemalatha Ramkumar5 December 2024, 2:54 pm
காலை முகத்திற்கு பயன்படுத்திய மேக்கப்பை இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு அகற்றுவது மிக மிக முக்கியம். ஏனெனில் அவற்றில் இருக்கும் கழிவுகள் சரும துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி, அதனால் முகப்பரு மற்றும் வயதான அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனினும் அதே சமயத்தில் மேக்கப்பை தவறான முறையில் அகற்றினால் அது உங்களுடைய சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்தி எரிச்சல் அல்லது வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே உங்களுடைய சருமத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு மேக்கப்பை சரியான முறையில் எப்படி அகற்றுவது என்பதை பற்றி பார்க்கலாம்.
மென்மையான மேக்கப் ரிமூவர்
கடினமான கிளென்சர்கள் சருமத்திலுள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி விடும். எனவே எளிமையாக மேக்கப்பை அகற்றுவதற்கு தண்ணீர், எண்ணெய் அடிப்படையிலான ரிமூவர்கள் அல்லது கிளென்சிங் பாம்களை பயன்படுத்தவும். எண்ணெய் சருமத்திற்கு மிஸலார் தண்ணீர் சிறந்ததாக இருக்கும். மேலும் இது அதிக வாட்டர் ப்ரூஃப் கொண்ட மேக்ப்பை அகற்றுவதற்கு உதவியாக இருக்கும்.
சிறந்த முறையில் சுத்தம் செய்ய டபுள் கிளென்சிங்
முதலில் எண்ணெய் அடிப்படையிலான கிளென்சரை சருமத்திற்கு பயன்படுத்துங்கள். இது முகத்தில் உள்ள மேக்கப்பை உருகச் செய்யும், அதன் பிறகு தண்ணீர் அடிப்படையிலான கிளென்சரை பயன்படுத்தி மேக்கப்பை முழுவதுமாக அகற்றவும். இதனால் உங்கள் சருமத்தில் எந்த ஒரு எச்சமும் இருக்காது. அதே நேரத்தில் உங்களுடைய தோலின் ஈரப்பத தடையும் பராமரிக்கப்படும்.
மென்மையாக அகற்றவும்
முகத்தில் உள்ள மேக்கப்பை அகற்றுவதற்காக முகத்தை தேய்ப்பது அல்லது இழுப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. அதிலும் குறிப்பாக கண்களை சுற்றி உள்ள பகுதிகளை நாம் மென்மையாக கையாள வேண்டும். இதற்காக நீங்கள் ஒரு சாஃப்ட் காட்டன் பேட் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரிமூவர் கிளாத் பயன்படுத்தலாம். முகத்தில் இந்த பேடை ஒத்தி ஒத்தி எடுத்து மேக்கப்பை அகற்றிய பிறகு பொறுமையாக துடைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே : டிரை ஸ்கின் பிரச்சினை இனி இல்லை…இருக்கவே இருக்கு இயற்கை மாய்சரைசர்கள்!!!
கண்கள் மற்றும் உதடுகள்
வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா மற்றும் லாங் லாஸ்டிங் லிப்ஸ்டிக் போன்றவற்றிற்கு நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு நீங்கள் பிரத்தியேகமான ரிமூவர்களை பயன்படுத்துவது அவசியம். அவற்றை காட்டன் பேடில் தடவி ஒரு சில வினாடிகளுக்கு உங்களுடைய கண் இமைகள் அல்லது உதடுகளில் வைத்து விட்டு பிறகு துடைத்து எடுக்கவும்.
இயற்கை பொருட்களை பயன்படுத்தவும்
கடைகளில் இருந்து வாங்கப்படும் ரிமூவர்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் போன்றவற்றை பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள மேக்கப்பை மென்மையாக அகற்றுவதோடு அதற்கு தேவையான போஷாக்கையும் வழங்கும்.
ஆகவே இந்த முறைகளை பின்பற்றி உங்களுடைய மேக்கப்பை தினமும் அகற்றுங்கள். நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கும் சமயத்தில் கூட மேக்கப்பை அகற்றாமல் தூங்க வேண்டாம். தொடர்ச்சியாக அதனை செய்வது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.