டிரை ஸ்கின் பிரச்சினை இனி இல்லை…இருக்கவே இருக்கு இயற்கை மாய்சரைசர்கள்!!!
Author: Hemalatha Ramkumar5 December 2024, 11:27 am
குளிர்கால மாதங்கள் நம்முடைய சருமத்தில் மிகவும் கடினமாக செயல்படும். இதனால் வறண்ட, வெள்ளை நிற திட்டுக்கள் மற்றும் இறுக்கமான சருமம் ஏற்படுவது வழக்கம். இந்த பிரச்சனையை சமாளிப்பதற்கு உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கத்தில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம். எனவே சருமத்திற்கு தேவையான ஆழமான ஈரப்பதத்தையும், போஷாக்கையும் கொடுப்பதற்கு இயற்கை மாய்சரைசர்களை பயன்படுத்துங்கள். கடைகளில் விற்பனை செய்யப்படும் மாய்சரைசர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் இயற்கை பொருட்கள் அவற்றை விட சிறப்பாக செயல்படக்கூடும். ஏனெனில் இயற்கை பொருட்களில் எந்த ஒரு கெமிக்கல்களும் இருக்காது. அதே நேரத்தில் அவற்றில் தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கும். அந்த வகையில் வறண்ட சருமத்தை சரி செய்து மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும் சில இயற்கை மாய்சரைசர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் ஒரு அற்புதமான இயற்கை மாய்சரைசர். இது வறண்ட சருமத்தில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தும். இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்திற்குள் ஆழமாக ஊடுருவி அதற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. மேலும் இது சருமத்தில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடி தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைத்து வறட்சி அல்லது விரிசல்களை போக்குகிறது. இதற்கு சிறிதளவு தேங்காய் எண்ணெயை கைகளில் எடுத்து இரு கைகளையும் நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை உங்களுடைய சருமத்தில் தடவி பொறுமையாக மசாஜ் செய்யவும். குறிப்பாக முட்டி பகுதி, கைகள் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
ஆலிவ் எண்ணெய்
பல வருடங்களாக ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு தேவையான போஷாக்கை பெறுவதற்கும் பாதுகாப்பு அடுக்கை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின்கள் A மற்றும் E மட்டும் அல்லாமல், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் காணப்படுவதால் சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை அளித்து அதன் நெகிழ்வு தன்மையை மேம்படுத்துகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் இருந்து ஈரப்பதம் வெளியேறாமல் ஒரு தடையாக செயல்படுகிறது. இதற்கு குளித்த பிறகு சிறிதளவு ஆலிவ் எண்ணெயை நேரடியாக உங்கள் சருமத்தில் தடவலாம். பிறகு பொறுமையாக மசாஜ் செய்யும் பொழுது அது உங்கள் சருமத்தில் உறிஞ்சப்படும்.
தேன்
தேனை சருமத்தில் பயன்படுத்துவது அதற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி வறண்ட விரிசல் கொண்ட சருமத்தை ஆற்றி தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். அதிலும் குறிப்பாக சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இது அமைதியூட்டும் விளைவை அளித்து, சருமத்தில் மென்மையாக செயல்படுகிறது. இதற்கு நீங்கள் ஈரமான சருமத்தில் தேனை தடவி 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருந்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
கற்றாழை
கற்றாழை அதன் ஆற்றும் தன்மைகள் மற்றும் குளிரூட்டும் விளைவுகளுக்காக அறியப்படும் ஒரு அற்புதமான இயற்கை பொருள். வறண்ட சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மூலம் ஆரோக்கியமான சருமத்தை வழங்குகிறது. இது வறண்ட மற்றும் எண்ணெய் சருமம் ஆகிய இரண்டிற்கும் ஏற்றதாக அமைகிறது. இதற்கு ஃபிரஷ்ஷான கற்றாழை ஜெல்லை நேரடியாக உங்களுடைய தருமத்தில் தடவலாம்.
அவகாடோ
அவகாடோ என்பது ஒரு அற்புதமான இயற்கை மாய்சரைசர். இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள எண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தை மீட்டெடுத்து, வறண்ட சருமத்தை ஆற்றுகிறது. அது மட்டுமல்லாமல் இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தி, மெல்லிய கோடுகளை குறைக்கிறது. இதற்கு நீங்கள் நல்ல பழுத்த அவகாடோ பழத்தை கூலாக மசித்து முகம் மற்றும் உடலில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.