குளிர் காலம் தானே… ஒரு நாள் குளிக்கலானா என்ன ஆகப்போகுதுன்னு அசால்ட்டா இருந்துடாதீங்க… அது ரொம்ப டேஞ்சர்!!!
Author: Hemalatha Ramkumar31 December 2024, 10:57 am
வெப்பநிலை குறைந்து, குளிர் காலம் ஆரம்பித்துவிட்டது. கதகதப்பான இடத்தில் இருக்க ஆசைப்படுகிறோம். இந்த சமயத்தில் தண்ணீரை தொடுவதற்கே சற்று பயமாக தான் இருக்கும். அதிலும் குளிக்க வேண்டும் என்றால் “குளிச்சு தான் ஆகணுமா” என்ற யோசனை பலருக்கு வருகிறது. ஆனால் குளிர்காலத்திலும் கூட தினமும் குளிக்க வேண்டியது அவசியம். இதற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளது. ஒரு சிலர் குளிர் காலத்தில் குளிப்பதை தவிர்த்து விடுகின்றனர். அவ்வாறு ஏன் செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் புரிந்து கொள்ளலாம்.
தனிநபர் சுகாதாரம்
தினமும் குளிப்பது தனிநபர் சுகாதாரத்தை பராமரிப்பதில் மிகவும் முக்கியமான ஒரு பங்கை கொண்டுள்ளது. குளிர் காலத்தில் கோடை காலம் போல உங்களுக்கு அதிகமாக வியர்க்காவிட்டாலும் கூட இன்னும் நம்முடைய உடல் எண்ணெய்களை உற்பத்தி செய்து, இறந்த சரும செல்களை வெளியேற்றி, பாக்டீரியாக்களை சேமித்து வைத்திருக்கும். எனவே தினமும் குளிப்பது இந்த அழுக்குகளை அகற்றி உங்களுடைய தோலில் தொற்றுகள் ஏற்படுவதை குறைத்து, உடலில் துர்நாற்றம் வீசாமலும், பிற சுகாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தடுப்பதற்கும் உதவுகிறது. சுத்தமான சருமத்தில் குளிர்கால வறட்சி மற்றும் எரிச்சல் ஏற்படுவது குறைவாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு செயல்பாடு
குளிர்காலத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு கொண்டுள்ளது. வெதுவெதுப்பான குளியலில் நீங்கள் ஈடுபடும் பொழுது ரத்த ஓட்டம் அதிகரித்து, அதனால் நோய் எதிர்ப்பு செல்கள் உடல் முழுவதும் திறம்பட பயணிப்பதற்கு உதவியாக இருக்கும். இந்த மேம்படுத்தப்பட்ட ரத்த ஓட்டம் குளிர்காலத்தில் பொதுவாக ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். மேலும் மூக்கடைப்பிலிருந்தும் நிவாரணம் தருகிறது.
மனநலன்
குளிப்பதற்கும் மனநலனுக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மையில் குறைவான சூரிய வெளிச்சம் மற்றும் சீசனல் டிசார்டர் ஆகியவை நம்முடைய மன ஆரோக்கியத்திற்கு சவாலான விஷயமாக அமைகின்றது. இந்த நேரத்தில் நீங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கும் பொழுது உங்கள் உடலுக்கு ஓய்வு கிடைத்து, மன அழுத்தம் குறைந்து, மனநிலை மேம்படுத்தப்பட்டு, மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளியிடப்படுகிறது.
சரும ஆரோக்கியம்
குளிர்காலம் மற்றும் வீட்டிற்குள் இருக்கும் சூடு சருமத்தில் உள்ள இயற்கை ஈரப்பதத்தை உறிஞ்சி, வறட்சி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். எனினும் தினமும் குளித்தால் உங்களுடைய சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைத்து, அதனை ஆரோக்கியமாக நீங்கள் பராமரிக்கலாம். மேலும் குளிப்பது சருமத்தை மென்மையாக்குகிறது.
இதையும் படிக்கலாமே: குளிர் காலத்தில் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமா…???
நல்ல தூக்கம்
வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது உங்களுடைய தசைகளுக்கு ஓய்வளித்து, மனதை அமைதிப்படுத்தி, விரைவில் தூங்குவதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். உடலில் வெப்பநிலை அதிகரித்து அதன் பின்னர் பொறுமையாக அது குளிமடையும்போது உங்களுடைய உடலுக்கு இது ஓய்வெடுக்க வேண்டிய நேரம் என்ற சிக்னல் கிடைக்கிறது. இதனால் உங்களுக்கு நல்ல தரமான தூக்கம் கிடைக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.