பொதுவாக தாகத்தை தணிக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் பலர் இளநீர் பருகுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இளநீரில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் இருக்கிறது. இந்த எலக்ட்ரோலைட்டுகள் நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து, டீஹைட்ரேஷன் ஏற்படுவதை தவிர்க்கிறது. வயிற்றுப்போக்கு அல்லது உடற்பயிற்சி காரணமாக ஏற்பட்ட டீஹைட்ரேஷனுக்கு தீர்வாக பலர் இளநீரை பருகுகின்றனர். அது மட்டுமல்லாமல் அதிக ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும் இளநீர் பயன்படுத்தப்படுகிறது. எனினும் அனைவருக்கும் இளநீர் ஏற்றது கிடையாது. எனவே, யாரெல்லாம் இளநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்
இளநீர் பொதுவாக ஒரு பானமாக கருதப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் போது அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போதோ இளநீர் குடிப்பது பாதுகாப்பானது என்பது சம்பந்தப்பட்ட போதுமான தகவல்கள் இல்லை என்பதால் பாதுகாப்பாக இருப்பதற்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும், கர்ப்பிணி பெண்களும் இளநீர் பருகுவதை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகள்
இளநீர் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இதனை ஒரு மருந்தாக எடுத்துக் கொள்வது மற்றும் சரியான அளவில் குழந்தைகளுக்கு கொடுப்பது பயனுள்ளதாக அமையும்.
சிஸ்டிக் ஃபைப்ராசிஸ்
சிஸ்டிக் ஃபைப்ராசிஸ் என்பது நமது உடலில் உள்ள உப்பு அளவுகளை குறைக்கும் ஒரு நிலையாகும். ஃபைப்ராசிஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் அதிக திரவங்கள் அல்லது மாத்திரைகளை எடுத்துக்கொண்டு உப்பு அளவுகளை அதிகரிக்க வேண்டும். இளநீரில் உப்பு அளவை அதிகரிப்பதற்கு தேவையான உப்பு இல்லை. மேலும் இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. எனவே சிஸ்டிக் ஃபைப்ராசிஸ் இருப்பவர்கள் உப்பு அளவை அதிகரிப்பதற்காக இளநீர் குடிப்பதை தவிர்க்கவும்.
ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம்
இளநீரில் பொட்டாசியம் தாது அதிகமாக காணப்படுகிறது. எனவே ஒருவேளை உங்களுடைய ரத்தத்தில் ஏற்கனவே அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் இளநீர் பருகுவதை தவிர்ப்பது முற்றிலும் அவசியம்.
சிறுநீரகப் பிரச்சனைகள்
நாம் ஏற்கனவே கூறியது போல இளநீரில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக பொட்டாசியம் என்பது ரத்தத்தில் அதிகமாகிவிட்டால் அது சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். ஆனால் சிறுநீரகம் சரியான முறையில் இயங்காத போது இந்த செயல்முறை நடைபெறாது. இதனால் உங்களுக்கு உங்களுடைய சிறுநீரக பிரச்சனைகள் இன்னும் தீவிரமாகலாம். ஆகவே சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் இளநீர் பருகுவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் படிக்க: மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்: மார்பக புற்றுநோய் வர இருப்பதை உணர்த்தும் ஆரம்ப அறிகுறிகள்!!!
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்னரும் இளநீர் குடிப்பது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் தலையிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு முன்பில் இருந்து இளநீர் பருகுவதை தவிர்த்து விடுங்கள்.
எந்த ஒரு உணவும் ஆரோக்கியமானதாக இருந்தாலும் கூட, அது நமக்கான உணவா என்பதை தெரிந்து கொள்வதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். தனிநபர் உடலை பொறுத்து அதற்கேற்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.