BP அதிகமாகிட்டா ரொம்ப பிரச்சினையா போய்விடும்… அத கன்ட்ரோல் பண்ண ஈசி டிப்ஸ் இதோ!!!

Author: Hemalatha Ramkumar
18 November 2024, 5:09 pm

தமனிகளின் சுவர்களுக்கு எதிராக ரத்தம் எவ்வளவு வேகமாக உந்தப்படுகிறதோ அதுவே ரத்த அழுத்தம். இது இயற்கையாகவே நம்முடைய செயல்பாடு, மன அழுத்தம், ஆரோக்கிய நிலை மற்றும் ஒரு சில வாழ்க்கை முறை காரணிகளான உணவு, உடற்பயிற்சி மற்றும் தூக்கம் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். நம்முடைய ரத்த அழுத்தத்தை கண்காணித்து, அதனை சீராகப் பராமரிப்பது அவசியம். ஏனெனில் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது நம்முடைய ஆரோக்கியத்தை பாதிக்கும். 

சராசரி ரத்த அழுத்தத்திற்கான அளவீடு என்பது 120/80 mm hg ஆகும். இந்த அளவை விட ரத்த அழுத்தம் தொடர்ச்சியாக அதிகமாக இருந்தால் அது ஹைப்பர்டென்ஷன் இருப்பதை குறிக்கிறது. இதனால் இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக சேதம் ஏற்படலாம். ரத்த அழுத்தம் 90/60 mm hg தொடர்ச்சியாக குறைவாக இருந்தால் அது ஹைப்போடென்ஷன், அதாவது குறைந்த ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. 

உலக சுகாதார நிறுவனத்தின் படி, இந்தியாவில் 4 பெரியவர்களில் ஒருவருக்கு ஹைப்பர்டென்ஷன் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இவர்களில் 12 சதவீத நபர்கள் மட்டுமே அவர்களுடைய இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை 25 சதவீதமாக மாற்றுவதற்கான இலக்கை இந்தியா அமைத்துள்ளது. எனவே ஒருவேளை உங்களுக்கு ஹைப்பர்டென்ஷன் பிரச்சனை இருந்தால் அதனை இயற்கையான முறையில் எப்படி குறைப்பது என்பதற்கான சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

சரிவிகித உணவு 

“நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதுவே நீங்கள்” என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். அதாவது நாம் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் சார்ந்த பொருட்கள் ஆகிய முழு உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். அதிக பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், கீரை வகைகள் போன்றவை சோடியம் அளவுகளை சமநிலையாக்கி ரத்த அழுத்தத்தை குறைக்கும். 

இதையும் படிக்கலாமே: சர்க்கரை நிறைய சாப்பிட்டா சர்க்கரை நோய் வருமா… டயாபடீஸ் பற்றிய கட்டுக் கதைகள்!!!

உப்பு எடுத்துக் கொள்வதை குறைத்தல் 

இந்தியாவில் தொடர்ந்து ஹைப்பர் டென்ஷன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இது 220 மில்லியன் நபர்களை பாதித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிக உப்பு சாப்பிடுவது என்று சொல்லப்படுகிறது. எனவே உப்பு என்பது உங்களுடைய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதை குறைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பேக்கேஜி செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பதும் அவசியம். 

தினமும் உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது உங்களுடைய ரத்த அழுத்தத்தை குறைத்து உடல் எடையை குறைப்பதற்கு உதவும். ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். உடற்பயிற்சியை பற்றி பேசும் பொழுது, உங்களுடைய இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு நன்மை தரும் விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது ஆடல் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை தேர்வு செய்யுங்கள்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் 

மன அழுத்தம் உங்களுடைய இரத்த அழுத்தத்தை மிக மோசமாக பாதிக்கலாம். நீங்கள் மன அழுத்தமாக இருந்தால் உங்கள் உடலில் அட்ரினலின் மற்றும் கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் வெளியிடப்படும். இதனால் நம்முடைய இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். இது ரத்த நாளங்களை குறுக செய்யும். இதன் விளைவாக இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு உடற்பயிற்சி, தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சு பயிற்சிகளை செய்யலாம். 

நல்ல தூக்கம் 

தரமான தூக்கம் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியம். மேலும் இது ரத்த அழுத்தத்தை சீராக்குவதிலும் முக்கிய பங்கு கொண்டுள்ளது. தூக்கத்தின் பொழுது உங்களுடைய உடலுக்கு ஓய்வு கிடைப்பதோடு தன்னை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. இது மன அழுத்தத்தையும், வீக்கத்தையும் குறைத்து நாளடைவில் ரத்த அழுத்தத்தை குறைக்கும். 

இந்த எளிமையான இயற்கை வாழ்க்கை முறை மாற்றங்களை செய்து ரத்த அழுத்தத்தை சீராக பராமரித்து ஆரோக்கியமான இதயத்தை கொண்டிருங்கள்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!