கர்ப்பிணி பெண்கள் டயட்ல இந்த மாதிரி சூப்பர் ஃபுட்கள் இருக்குறது அவ்வளவு நல்லது!!!
Author: Hemalatha Ramkumar1 November 2024, 1:28 pm
இன்றைய நவீன உலகில் கர்ப்ப காலத்தில் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே கர்ப்பிணி பெண்ணுக்கும் சிசுவிற்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் என்று இன்றைய கமர்ஷியல் மார்க்கெட்டிங் நம்ப வைக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் உங்களுடைய அன்றாட உணவில் பாரம்பரியமான இந்திய சூப்பர்ஃபுட்டுக்களை சேர்ப்பதும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் உங்களுடைய கர்ப்பகால பயணத்தை எளிமையாக்கும். மருத்துவர் பரிந்துரை செய்தாலே ஒழிய ஊட்டச்சத்து தேவைகளுக்கு இயற்கையான உணவுகளை நாடுவது சிறந்தது. இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உங்களுடைய கர்ப்ப காலத்தை எளிமையாக்கும். மேலும் தாய் மற்றும் சிசு ஆகிய இருவருக்கும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்கும். ஆகவே கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் சிலவற்றை பற்றி பார்க்கலாம்.
கேழ்வரகு
கேழ்வரகு என்பது கால்சியம் மற்றும் இரும்புச் சத்தின் அற்புதமான மூலம். இது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். மேலும் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது. இதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் போதுமான ஆற்றலை வழங்கி, ரத்த சர்க்கரை அளவுகள் சீராக பராமரிப்பதற்கு உதவுகிறது. அது மட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்களுக்கு நீண்ட நேரத்திற்கு ஸ்டாமினாவே வழங்குகிறது.
மக்கானா
புரோட்டின் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த மக்கானா குறைந்த கலோரி தின்பண்டம். கர்ப்ப காலத்தில் இதனை உங்களுடைய சரிவிகித உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ள ஏற்றது இதில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது.
நெல்லிக்காய்
அதிக அளவு வைட்டமின் C நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இரும்பு உறிஞ்சப்படும் திறனை மேம்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான ரத்த அளவுகளை பராமரிப்பதற்கும் நெல்லிக்காய் உதவி புரிகிறது. அஜீரணத்தை போக்கி, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
இரும்பு சத்து நிறைந்த கீரை வகைகள்
முருங்கைக்கீரை, முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை போன்ற கீரை வகைகளில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் கர்ப்ப காலத்தின் போது ஹீமோகுளோபின் அளவுகளை சீராக பராமரிப்பதற்கு இது உதவுகிறது. இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு சோர்வு ஏற்படாமல் அதே நேரத்தில் சிசுவின் வளர்ச்சியும் மேம்படுகிறது. கீரைகளில் உள்ள ஹைட்ரேடிங் பண்புகள் போதுமான ஆற்றல் அளவுகளை வழங்குகிறது.
ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மசாலா பொருட்கள்
கர்ப்ப காலத்தில் மிதமான அளவு நெய் சாப்பிடுவது ஹார்மோன் சமநிலைக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்கும். அதே நேரத்தில் மஞ்சள் தூள் மற்றும் ஓமம் போன்ற ஆற்றும் தன்மை கொண்ட மசாலா பொருட்கள் செரிமானத்திற்கு உதவி வீக்கத்தை குறைக்கிறது. இதனால் இது கர்ப்பகால உணவுக்கு ஏற்றதாக அமைகிறது.
சூப்பர்ஃபுட்டுகளாக விதைகள்
ஒரு சில விதைகள் சூப்பர்ஃபுட்டுகளில் முக்கிய பங்குகளை கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக அவற்றில் உள்ள ஊட்டச்சத்து காரணமாக கர்ப்ப காலத்தில் சேர்க்க வேண்டிய உணவாக இவை அமைகின்றன.
இதையும் படிக்கலாமே: உங்களுக்கு தினமும் மேக்கப் போடுற பழக்கம் இருக்கா… அப்படின்னா நைட் தூங்குறதுக்கு முன்னாடி இத நீங்க கண்டிப்பா செய்யணும்!!!
ஆளி விதைகள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படும் ஆளி விதைகள் சிசுவின் மூளை வளர்ச்சிக்கும், தாயின் இதய ஆரோக்கியத்திற்கும் ஆதரவு தருகிறது. அதே நேரத்தில் இதில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் மெக்னீசியம், புரோட்டீன் மற்றும் சிங்க் உள்ளது. மெக்னீசியம் தசைகளுக்கு ஓய்வளித்து சுளுக்குகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் சிங்க் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. விதைகள் நமக்கு உடனடியாக மற்றும் சௌகரியமான முறையில் ஊட்டச்சத்துக்களை தந்து நம்முடைய ஆற்றலை பராமரிக்கிறது.
இந்த சூப்பர்ஃபுட்டுகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிசுவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி தாய் மற்றும் சேயின் நீண்ட கால ஆரோக்கியத்திற்கான ஒரு அடித்தளத்தை அமைக்கிறது.