தீபாவளிய ஜோரா கொண்டாடியாச்சு… இப்போ செரிமான ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டுமா…???
Author: Hemalatha Ramkumar1 November 2024, 4:22 pm
தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு பலருக்கு வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணம் கோளாறுகள் ஏற்பட்டு இருக்கலாம். தீபாவளி சமயத்தில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் நாம் சாப்பிட்ட பலகாரங்களின் காரணமாக இது வந்திருக்கலாம். எனினும் இதற்காக நீங்கள் குற்ற உணர்ச்சி கொள்ள தேவையில்லை. உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி செரிமான அமைப்பை மீண்டும் வழக்கம்போல இயங்குவதற்கு உதவும் ஒரு சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
தண்ணீர்
நம்முடைய உடலில் கழிவுகளை வெளியேற்றுவதற்கு மிகவும் எளிமையான ஒரு வழி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது. நம் உடலில் அதிக அளவு தண்ணீர் இருந்தால் தான் உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு, வயிற்று உப்புசம் குறைந்து, செரிமானம் சீராகும். எனவே தினமும் குறைந்தபட்சம் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்துங்கள். தண்ணீர் மட்டுமல்லாமல் இஞ்சி டீ அல்லது புதினா டீ போன்ற மூலிகை தேநீர்களை பருகுவது செரிமானத்தை மேம்படுத்தி வீக்கத்தை குறைக்கும். வெறும் தண்ணீரை குடிப்பதற்கு விருப்பம் இல்லாதவர்கள் அதில் எலுமிச்சை அல்லது வெள்ளரிக்காய் கலந்து குடிக்கலாம். இதன் மூலமாக பலனும் அதிகரிக்கும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
ஆரோக்கியமான செரிமானத்திற்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும் நார்ச்சத்து மிகவும் அவசியம். தீபாவளிக்கு பிறகு உங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள், பீன்ஸ் வகைகள், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்துங்கள். ஆப்பிள், பெர்ரி, ப்ராக்கோலி மற்றும் ஓட்ஸ் போன்றவை அதிக நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள்.
இதையும் படிக்கலாமே: கர்ப்பிணி பெண்கள் டயட்ல இந்த மாதிரி சூப்பர் ஃபுட் இருக்குறது அவ்வளவு நல்லது!!!
அடிக்கடி சிறிய அளவுகளில் சாப்பிடவும்
வழக்கம் போல ஒரேடியாக உங்கள் உணவுகளை சாப்பிட்டு முடிக்காமல் சிறிய அளவுகளில் நாள் முழுவதும் அடிக்கடி சாப்பிடுங்கள். இவ்வாறு செய்வது உங்கள் செரிமான அமைப்பை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு உதவும். மேலும் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு தவிர்க்கப்படும். உங்கள் உணவில் மெலிந்த புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அதிக காய்கறிகள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். இது உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கி அதே நேரத்தில் நீங்கள் அதிகப்படியாக சாப்பிடுவதை தடுக்க உதவும்.
ப்ரோபயாட்டிக் உணவுகள்
ப்ரோபயாட்டிக்களில் நமது குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. ப்ரோபயாட்டிக் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது குடலில் உள்ள நல்ல பாக்டீரியா எண்ணிக்கையை சமநிலை செய்யும். இதற்கு தயிர் அல்லது புளிக்க வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடலாம்.
உடற்பயிற்சி
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். இது செரிமானத்தை தூண்டி நச்சு நீக்க செயல்முறையை துரிதப்படுத்தும். பண்டிகைக்குப் பிறகு நடை பயிற்சி, யோகா அல்லது நீட்சி பயிற்சிகள் போன்ற மிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். சாப்பிட்ட பிறகு சிறிய தூரம் நடப்பது கூட உங்களுடைய செரிமானத்தை அதிகமாக்கி வயிற்று உப்புசம் ஏற்படாமல் பாதுகாக்கும்.
ஓய்வு
இறுதியாக உங்கள் உடல் நல்லபடியாக மீண்டு வருவதற்கு அதற்கு நீங்கள் போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும். தரமான தூக்கம் என்பது மிகவும் அவசியம். எனவே தினமும் 7 முதல் 9 மணி நேரம் நல்ல தரமான இரவு தூக்கம் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் மனதை அமைதிப்படுத்துவதற்கு தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சு பயிற்சிகளை செய்யலாம்.