தாய்ப்பாலை இயற்கையான முறையில் அதிகரிக்க இளம் தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள்!!!

Author: Hemalatha Ramkumar
11 September 2024, 5:56 pm

தாய்மை என்பது பல ஆச்சரியங்கள் மற்றும் சவால்கள் நிறைந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான பயணமாகும். இதில் உங்களுடைய தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிப்பதில் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு கட்டாயமாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 

தாய்ப்பாலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய காரணம் என்ன? 

தாய்ப்பால் என்பது குழந்தைக்கு அத்தியாவசிய போஷாக்கை வழங்குவது மட்டுமல்லாமல் அது பல்வேறு ஆன்டிபாடிகளின் களஞ்சியமாக திகழ்கிறது.  இந்த ஆன்டிபாடிகள் தொற்றுகள் மற்றும் இன்ஃபான்ட் டெத் சிண்ட்ரோம் போன்றவை ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. மேலும் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகிறது. 

குழந்தை பிறந்த உடனேயே நீங்கள் சீம்பாலை உற்பத்தி செய்ய துவங்குவீர்கள்.  இந்த சீம்பாலில் ஆன்டிபாடி அதிகம் இருக்கும். மேலும் இது உங்களுடைய குழந்தைக்கு தேவையான நீர்சத்தை வழங்கி குழந்தையை  தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு சில நாட்களில் இந்த சீம்பால் வழக்கமான பாலாக மாறும். ஆரம்பத்தில் குழந்தை உடல் எடை குறைவது சகஜம்தான். ஆனால் அதன்பிறகு நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க கொடுக்க அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். ஒருவேளை உங்களுக்கு உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டால் உங்களுடைய தாய்ப்பாலில் உள்ள ஆன்டி பாடிகள் குழந்தைக்கு மாற்றப்படும். இது குழந்தைக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும். 

தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

தாய்ப்பாலில் எளிதில் செரிமானம் ஆகும் கேஸின் மற்றும் வே போன்ற புரோட்டீன்கள் உள்ளன. இவை வளர்ச்சிக்கு அவசியமான அமினோ அமிலங்களை கொடுக்க கூடியவை. வே புரதங்களில் பாக்டீரியாக்களுக்கு எதிரான பண்புகள் உள்ளது. மேலும் தாய்ப்பாலில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா 6 போன்ற கொழுப்புகள் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் அறிவுதிறன் செயல்பாட்டுக்கு பங்களிக்கிறது. 

தாய்ப்பாலில் காணப்படும் கார்போஹைட்ரேட்டுகள் தேவையான ஆற்றலை வழங்கி குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களுக்கு ஆதரவு வழங்குகிறது. இதனால் செரிமான ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. மேலும் இது தவிர தாய்ப்பாலில் வைட்டமின்கள் ஏ, டி, இ மற்றும் கே போன்றவை நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு அளிப்பது, பார்வை மேம்பாடு, எலும்பு ஆரோக்கியம் போன்ற நன்மைகளை வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற தாதுக்களும் தாய்ப்பாலில் உள்ளது. இவை எலும்பு வளர்ச்சி, நொதி செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. 

தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதற்கு தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் அதிக கலோரிகள் நிறைந்த சரிவிகித உணவை தினமும் சாப்பிடுங்கள். 

கால்சியம் நிறைந்த உணவுகள், இரும்பு சத்து அதிகம் உள்ள மூலங்கள் மற்றும் மெலிந்த புரதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். 

போதுமான அளவு திரவங்களை பருகுங்கள். 

காஃபின் எடுத்து கொள்வதை முடிந்த அளவு குறைத்துக் கொள்வது நல்லது. 

போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் டி போன்ற வைட்டமின் சப்ளிமெண்ட்களை மருத்துவரின் ஆலோசனையை பெற்று சாப்பிடவும். 

ஏதேனும் உணவுகளுக்கு உங்களுக்கு சென்சிடிவிட்டி உள்ளதா என்பதை அவ்வப்போது கண்காணிக்கவும். 

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம். 

நிலையான ஒரு உணவு உண்ணும் அட்டவணையை பின்பற்றவும்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!