குளிர் காலத்தில் பச்சிளம் குழந்தைகளை நோய்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி…???

Author: Hemalatha Ramkumar
24 December 2024, 5:28 pm

பச்சிளம் குழந்தைகளின் உடல் மிகவும் மென்மையாகவும் அதே நேரத்தில் அவர்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பு முழுவதுமாக வளர்ச்சி அடையாத நிலையிலும் இருக்கும். இதன் காரணமாக அவர்களுக்கு வெகு விரைவாக தொற்றுகள் மற்றும் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே பச்சிளம் குழந்தைகளை ஆரோக்கியமாக வைப்பதற்கு அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் குழந்தைகளால் பருவ கால நோய்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சியும் மேம்படும்.

அதிலும் குறிப்பாக மாறுகின்ற வானிலை மற்றும் இந்த குளிர்காலத்தில் பச்சிளம் குழந்தைகளை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு நீங்கள் சில சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். எனவே இந்த பதிவில் பச்சிளம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு உதவும் ஒரு சில வழிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தாய்ப்பாலூட்டுதல் 

தாய்ப்பால் என்பது ஒரு குழந்தைக்கான முழுமையான உணவாக கருதப்படுகிறது. இதில் உள்ள ஆன்டிபாடிகள் குழந்தைகளை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். அதிலும் குறிப்பாக குழந்தையை பிரசவித்த பிறகு சுரக்கும் சீம்பால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு ஊக்கியாக அமைகிறது. இதில் வைட்டமின்களும், ஆன்டிபாடிகளும் அதிகமாக இருக்கும். எனவே குழந்தைக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களாவது தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.

சுகாதாரம் 

புதிதாக பிறந்த குழந்தைக்கு தொற்று ஏற்படுவது மிகவும் எளிது. எனவே அவர்களுடைய சருமம், ஆடைகள் மற்றும் சுற்றுப்புற சூழலை சுகாதாரமாக வைப்பது மிகவும் முக்கியம். குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகள் மற்றும் அவர்களுக்கான தேவையான பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். இவ்வாறு உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை நீங்கள் அதிகரிக்கலாம்.

சரியான வெப்பநிலை 

கைகுழந்தைகள் பொதுவாக குளிர் மற்றும் வெப்பத்திற்கு உடனடியாக எதிர்வினையை வெளிப்படுத்துவார்கள். எனவே அவர்களை சரியான வெப்பநிலையில் வைப்பது அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். குளிர்ந்த வானிலையில் அவர்களுக்கு கதகதப்பான மற்றும் மென்மையான ஆடைகளை அணிவிக்கவும். குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் பொழுது குளிர் காற்றில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கு இரண்டு அடுக்குக் கொண்ட ஆடைகளை நீங்கள் அவர்களுக்கு அணிவிக்கலாம்.

இதையும் படிச்சு பாருங்க: மீதமான ஒன்றிரண்டு காய்கறிகளை வைத்து இத்தனை அசத்தலான டிஷ் செய்யலாமா…???

தடுப்பூசி 

குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகளை வழங்குவது அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது அவர்களை மீசில்ஸ், அம்மை மற்றும் பிற மோசமான நோய்களிலிருந்து பாதுகாக்கும். எனவே தடுப்பூசி அட்டவணையில் உள்ள அனைத்து தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள தவற வேண்டாம்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவு 

6 மாதங்களுக்கு மேலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை அறிமுகப்படுத்தலாம். இது அவர்களுடைய உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவும்.

ஒரு பச்சிளம் பிள்ளையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவர்களுடைய ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் தேவை. எனவே தாய்ப்பால் கொடுத்தல், சுகாதாரம், தடுப்பூசி மற்றும் சரியான பராமரிப்பு மூலமாக உங்களுடைய குழந்தைகளை நோய்களிடம் இருந்து நீங்கள் பாதுகாக்கலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!