இரத்த விரித்தியை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள்!!!
Author: Hemalatha Ramkumar22 June 2023, 4:42 pm
உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதை நாம் சாதாரணமாக கருதக்கூடாது. இதனால் பல நோய்கள் உண்டாகும் அபாயம் உள்ளது. உடலில் சரியான அளவு ரத்தம் இல்லாதவர்கள் மற்றும் ரத்த சோகையினால் அவதிப்படுபவர்கள் ரத்த விருத்தியை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இரும்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உண்ணும் பொழுது ரத்தம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். ரத்தத்தில் இருக்கக்கூடிய சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலே ரத்த குறைபாட்டை சரி செய்து விடலாம். அந்த வகையில் லிச்சி பழம் ரத்தத்தை உற்பத்தி செய்வதற்கு அவசியமான ஊட்டச்சத்தை கொடுக்கிறது. ரத்த சிவப்பு அணுக்கள் உருவாகுவதற்கு அவசியமான மாங்கனீஸ், மெக்னீசியம், தாமிரம், மற்றும் இரும்பு சத்து போன்ற சத்துக்கள் லிச்சியில் இருக்கிறது. ஆகவே இரத்தம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் லிச்சியை பழமாகவோ அல்லது ஜூஸாக தயாரித்தோ குடிக்கலாம்.
பச்சை நிற காய்கறிகள் பல நோய்களுக்கு தீர்வாகிறது. அதில் ரத்தம் சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய காய்கறிகளை சாறாக எடுத்து தினமும் பருகிவர ரத்த விருத்தி அதிகரிக்கும். ஏனெனில் பச்சை நிற காய்கறிகளில் ஏராளமான இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் சி மற்றும் காப்பர் உள்ளது. இது ரத்தத்தின் உற்பத்தியை விரைவுப்படுத்துகிறது. அதோடு நமக்கு வேறு பல நன்மைகளும் கிடைக்கின்றன. ஆனால் இந்த சாறு குடிக்கும் பொழுது சர்க்கரை சேர்த்து கொள்ளக் கூடாது. அதற்கு பதிலாக பேரிச்சம்பழம் சேர்த்து சாப்பிடலாம்.
சிவப்பு நிறத்தில் காணப்படும் பீட்ரூட்டில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த சோகையை எளிதில் குணப்படுத்தலாம். பீட்ரூட்டை வேக வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக அதனை ஜூஸாக குடிப்பது அதன் பலனை அதிகரிக்கும். திராட்சைப்பழ சாறும் உடலில் உள்ள ரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.