காலை எழுந்திருக்கும் பொழுதே சோர்வாக இருந்தால் எப்படி… இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணி புத்துணர்ச்சியோட வேலைகளை ஸ்டார்ட் பண்ணுங்க!!!
Author: Hemalatha Ramkumar11 December 2024, 7:36 pm
காலை கண் விழிக்கும் பொழுதே படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள சோர்வாக இருக்கும் உணர்வை நம்மில் பலர் நிச்சயமாக அனுபவித்திருப்போம். போதுமான அளவு தூங்கிய பிறகும் காலை ஒருவித சோம்பேறித்தனம் ஏற்படலாம். இதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. நம்முடைய உடலின் இயற்கையான தூக்க-விழிப்பு சுழற்சி பாதிக்கப்படும் பொழுது இது ஏற்படுகிறது. இது குறிப்பாக மோசமான தூக்க தரம், சீரற்ற தூக்க அட்டவணைகள் அல்லது ஒரு சில மருத்துவ நிலைகளின் காரணமாக இருக்கலாம். இதனால் காலையில் உங்களுக்கு சோர்வு ஏற்பட்டு அன்றைய வேலைகளை செய்வதற்கு போதுமான ஆற்றல் கிடைக்காது. மேலும் அறிவுத்திறன் செயல்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவிழந்து காணப்படும்.
சாதாரணமாக செய்யக்கூடிய வேலைகள் கூட உங்களுக்கு கடினமானதாக தோன்றலாம். இது உங்களுடைய மனநிலையை பாதித்து, எரிச்சல், பதட்டம் மற்றும் மனசோர்வை ஏற்படுத்தும். எனவே காலை நேரத்தில் ஏற்படும் சோர்வை எதிர்த்து போராடுவதற்கு உதவும் சில எளிமையான வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தவும்
உங்களுடைய நாளை ஒரு டம்ளர் தண்ணீரோடு ஆரம்பிப்பது காலை நேர சோர்வை எதிர்த்துப் போராட ஒரு சிறந்த வழி. இரவு நேர தூக்கத்திற்கு பிறகு உங்கள் உடலுக்கு நீங்கள் மீண்டும் நீர்ச்சத்து கொடுக்கும்பொழுது ஆற்றல் அதிகரித்து, மெட்டபாலிசம் ஆரம்பித்து, உங்களுடைய மனது புத்துணர்ச்சி பெறும். சிறிதளவு நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டால் கூட அது சோர்வை ஏற்படுத்தலாம். எனவே காலை எழுந்ததும் முதல் வேலையாக தண்ணீர் குடிப்பது உங்களுடைய கவனத்திறன் மற்றும் எச்சரிக்கை உணர்வை அதிகரிக்கும்.
எளிமையான நீட்சி பயிற்சிகள், யோகா அல்லது தியானம்
யோகா, தியானம் அல்லது நீட்சி பயிற்சிகளை செய்வது சோர்வை உடனடியாக போக்குவதற்கான வழிகள். அதுமட்டுமல்லாமல் இது ரத்த ஓட்டம், நெகிழ்வுத் தன்மை மற்றும் ஆக்சிஜன் ஓட்டத்தை அதிகரித்து, மனதை அமைதிப்படுத்தும். இதனை உங்களுடைய அன்றாட வழக்கத்தில் சேர்த்து வந்தால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் வலுப்பெறும்.
இதையும் படிச்சு பாருங்க: இந்த மாதிரி உணவுகளை ஃபிரீசரில் வைத்து சாப்பிடவே கூடாதாம்!!!
ஊட்டச்சத்து நிறைந்த உணவு
ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய முழு உணவுகளை சாப்பிடுவது உங்களுடைய ஆற்றல் அளவுகளை சீராக்கி, அறிவுத்திறன் செயல்பாட்டுக்கு உதவி, பசியை கட்டுப்படுத்தும். ஒரு சரிவிகித காலை உணவை சாப்பிடுவது உங்களுடைய மெட்டபாலிசத்தை தூண்டி, நாள் முழுவதும் தேவையான சீரான ஆற்றலை வழங்கும்.
காஃபைன் குடிப்பதை தவிர்த்தல்
காலை எழுந்ததும் காபி அல்லது டீ குடிப்பதை தவிர்த்து விட்டாலே அன்றைய நாள் உங்களுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கும். காபி குடிப்பது உங்களுக்கு உடனடி ஆற்றலை கொடுத்தாலும், அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது உங்களுடைய தூக்க அட்டவணையை மாற்றி, நீர்ச்சத்து இழப்பை ஏற்படுத்தி, ஆற்றல் அளவுகளை குறைக்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.