உங்களுக்கு பீரியட்ஸ் எப்பவுமே லேட்டா தான் வரும்னா உங்ககிட்ட நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள் இருக்கு!!!

Author: Hemalatha Ramkumar
2 அக்டோபர் 2024, 1:52 மணி
Quick Share

அவ்வப்போது மாதவிடாய் சுழற்சிகளில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம் தான் என்றாலும் எப்பொழுதுமே உங்களுடைய மாதவிடாய் குறிப்பிட வேண்டிய தேதியை விட தாமதமாக வருகிறது என்றால் அது ஏதோ ஒரு உடல்நல பிரச்சினை இருப்பதை குறிக்கிறது. இது மன அழுத்தம் சம்பந்தப்பட்ட ஹார்மோன்கள் முதல் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது தைராய்டு கோளாறுகள் போன்ற மோசமான பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். இந்த பிரச்சனைகளை ஆரம்பத்தில் கண்டறிவது அதனால் ஏற்படுத்தும் சேதத்தை குறைக்கவும், மேலும் சிக்கல்கள் உண்டாவதை தவிர்க்கவும் உதவுகிறது. அந்த வகையில் ஒருவேளை தொடர்ச்சியாக நீங்கள் தாமதமான மாதவிடாயை அனுபவித்து வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 

கேள்வி 1: நான் அதிக மன அழுத்தத்தில் இருக்கிறேனா? 

மன அழுத்தம் காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படலாம். நீங்கள் அதிக மன அழுத்தமாக இருக்கும் பொழுது உங்களுடைய உடலில் கார்டீசால் என்ற மன அழுத்த ஹார்மோன் வெளியிடப்படுகிறது. கார்டீசால் என்பது மாதவிடாயை சரியான நேரத்தில் வருவதற்கு காரணமான ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது. எனவே அடுத்த முறை உங்களுக்கு மாதவிடாய் தாமதமாக வருகிறது என்றால் அதற்கு மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம். 

கேள்வி 2: நான் என்னுடைய உணவு அல்லது உடற்பயிற்சி வழக்கத்தில் சமீபத்தில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தினேனா? உங்களுடைய உணவு உண்ணும் பழக்கங்கள் அல்லது உடற்பயிற்சி வழக்கத்தில் நீங்கள் செய்யும் திடீர் மாற்றங்கள்  மாதவிடாய் சுழற்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். திடீரென்று நீங்கள் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டாலோ அல்லது குறைந்த கலோரி உணவை சாப்பிட்டாலோ உங்களுடைய ஆற்றல் அளவுகள் குறையலாம். இதனால் உங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு ஆதரவு தருவதற்கு உங்கள் உடலில் போதுமான ஆற்றல் இல்லாமல் போகலாம். இதன் விளைவாக ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது குறைவான மாதவிடாய் ரத்தப்போக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. 

கேள்வி 3: சமீபத்தில் என்னுடைய உடல் எடை அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்ததா?

அதிகப்படியான உடல் எடை என்பது ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் ஒரு சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பினை அதிகரிக்கிறது. அதிவிரைவாக உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது உங்கள் மாதவிடாயை சீராக பராமரிப்பதற்கு பொறுப்பான ஹார்மோன்களின் உற்பத்தியை எதிர்மறையாக பாதிக்கிறது. எனவே ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதற்கு போதுமான அளவு நடவடிக்கைகளை எடுக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

கேள்வி 4: நான் ஏதேனும் புதிய மருந்துகள் அல்லது சப்ளிமெண்ட்களை சாப்பிடுகின்றேனா?

ஒருவேளை நீங்கள் புதிதாக ஏதாவது மருந்துகள் அல்லது சப்ளிமெண்டை சாப்பிட்டால் அதன் விளைவாக உங்களுடைய மாதவிடாய் தாமதமாக வரலாம். ஆன்டி டிப்ரசன்ட்ஸ், பிறப்பு கட்டுப்பாடு மருந்துகள் அல்லது தைராய்டு மருந்துகள் போன்றவை உங்களுடைய மாதவிடாய் சுழற்சியை பாதிக்க வாய்ப்புள்ளது.  

கேள்வி 5: நான் போதுமான அளவு தூங்குகிறேனா? 

நீங்கள் சரியாக தூங்காவிட்டாலும் அது உங்களுடைய மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் மாதவிடாய் இரத்தப்போக்கை பெரிய அளவில் பாதிக்கலாம். மோசமான தூக்க தரம் என்பது மன அழுத்த அளவுகளை அதிகரித்து அதனால் ஹார்மோன் சமநிலையின்மை உண்டாகி தாமதமான மாதவிடாய் அல்லது மாதவிடாய் ஏற்படாமல் இருப்பதற்கு கூட வழிவகுக்கும். எனவே தினமும் நீங்கள் 7 முதல் 8 மணி நேரம் நல்ல உறக்கத்தை பெறுவதை உறுதிப்படுத்துங்கள். அதன் மூலமாக உங்களுடைய மாதவிடாய் ஆரோக்கியமும் சிறக்கும்

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Palani பழனி கோவில் ராஜகோபுரம் சேதம் : ஆபத்து பக்தர்களுக்கா..? அரசுக்கா.?
  • Views: - 38

    0

    0

    மறுமொழி இடவும்