திடீர் பயம் காட்டும் HMPV வைரஸ்.. அறிகுறிகள் என்னென்ன? உண்மையில் உலகத்தொற்றா இது?
Author: Hariharasudhan6 January 2025, 2:47 pm
இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு தொற்றியுள்ள HMPV வைரஸ் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து இதில் காணலாம்.
சென்னை: கரோனா பெருந்தொற்றைச் சந்தித்த உலகம், தற்போது புதிதாக சீனாவில் HMPV என்ற வைரஸ் பரவி வருவதால் மக்கள் மத்தியில் பலத்த அச்சம் ஏற்பட்டு உள்ளது. ஏனென்றால், இந்த தொற்றின் காரணமாக சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் அலைமோதுவதாக, கடந்த சில நாட்களாகவே வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தற்போது இந்தியாவிலும் HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன்படி, நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதாவது, 8 மாத ஆண் குழந்தை மற்றும் 3 மாத பெண் குழந்தைக்கு தொற்று உறுதி ஆகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. மூன்றாவதாக, அகமதாபாத்தைச் சேர்ந்தவருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், HMPV வைரஸ் என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது, HMPV வைரஸ் என்பது Human Metapneumo Virus என்பதன் சுருக்கம் ஆகும். கரோனா தொற்று போலவே மூச்சுக்குழாயை பாதிக்கக்கூடும் ஒரு வகையான வைரஸ் தான் HMPV. தற்போது சீனாவின் வடக்கு பகுதிகளில் இது அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக, 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை இந்த வைரஸ் அதிகமாக தாக்குவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தின் மரபுகளை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டுமா? பாமக முதல் விசிக வரை கூறுவது என்ன?
மேலும், HMPV வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக, சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி மற்றும் மூச்சுத்திணறல் போன்றவையும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதுவொரு புதிய வைரஸ் அல்ல என்றும், 20 ஆண்டுகளாக இதைப் பற்றி மக்கள் அறிந்திருக்கிறார்கள் எனவும், இது காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸைப் போன்றது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொறுப்புத்துறப்பு: மேற்கூறிய தகவல்கள் அனைத்தும், மாநில, மத்திய அரசுகள் மற்றும் பல்வேறு தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இதற்கும், Update News 360-க்கும் தொடர்பில்லை.