‘மிடில் கிளாஸ் தான் டார்க்கெட்’…7 மாநிலங்களில் 14 கல்யாணம்: மேட்ரிமோனி மோசடி மன்னன் கைது…அதிர வைக்கும் பின்னணி..!!
Author: Rajesh15 February 2022, 3:36 pm
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 14 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய மோசடி பேர்வழியை ஒடிசா போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பட்குரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்திர ஸ்வைன் என்பவர், 1982ல் முதல் திருமணம் செய்துள்ளார். அதன்பிறகு 2002ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அவருக்கும் முதல் இரண்டு மனைவிகளுக்கும் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. அதன்பிறகு 2002ம் ஆண்டிலிருந்து 2020 ஆண்டு வரையில், ரமேஷ் சந்திர ஸ்வைன், மேட்ரிமோனி வலைதளங்கள் மூலம் நடுத்தர வயதுடைய விவாகரத்தான பெண்களை குறிவைத்து அவர்களுடன் பழகி மற்ற மனைவிகளுக்குத் தெரியாமல் அவர்களை திருமணம் செய்துள்ளார்.
அதன்பிறகு அவர்களிடமிருந்து பணம், நகை ஆகியவற்றை பெற்றுக் கொண்டு அவர்களை ஏமாற்றியுள்ளார். இதுவரை டெல்லி, பஞ்சாப், அசாம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள பெண்களை ஏமாற்றி 14 திருமணம் செய்துள்ளார். இந்த பெண்களிடம் டாக்டர், இந்தோ திபெத் எல்லை படை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி, டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எனக்கூறி மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார்.
ரமேஷ் சந்திர ஸ்வைன் முதல் இரண்டு மனைவிகளும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள். கடைசியாக டெல்லியில் பள்ளி ஆசிரியையாக இருந்த ஒருவரை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பிறகு அவருடன் ஒடிசா தலைநகரில் தங்கி இருந்துள்ளார். அவரின் முந்தைய திருமணங்களை பற்றி தெரிந்து கொண்ட அவரது கடைசி மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 11 ஏடிஎம் கார்டுகள், 4 ஆதார் அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.