20 அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து: 7 பேர் பலி…15 பேர் படுகாயம்…தீவிபத்தின் அதிர்ச்சி வீடியோ!!
Author: Rajesh22 January 2022, 3:15 pm
மகாராஷ்டிரா: மும்பையில் அமைந்துள்ள 20 மாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் நானா சவுக் பகுதியில் அமைந்துள்ள பாட்டியா மருத்துவமனைக்கு அருகே அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ள பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் 20 மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டடம் அமைந்துள்ளது.
இந்த கட்டடத்தின் 18வது தளத்தில் உள்ள ஒரு வீட்டில், இன்று காலை திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் பரவிய தீ மளமளவென அந்த தளம் முழுக்க பரவியது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும், 13 தீயணைப்பு வாகனங்களில் சென்ற மும்பை தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
அந்தபகுதி முழுவதும் பெரும் புகை மண்டலமாக மாறியதால், தீ விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பலரையும் மீட்டனர். எனினும், இந்த தீ விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.