ஊழலின் ஒட்டுமொத்த அடையாளமே 2ஜி தான் : 5ஜி அலைக்கற்றை சோதனையை துவக்கி வைத்த பிரதமர் மோடி தாக்கு!!
Author: Udayachandran RadhaKrishnan17 May 2022, 8:15 pm
டெல்லி : அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவால் 6ஜி சேவையை துவங்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 1997ல் துவக்கப்பட்டது. அதன் 25ம் ஆண்டு நிகழ்வு இன்று கொண்டாடப்படுகிறது. இந்த வெள்ளிவிழா நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, 5ஜி அலைக்கற்றை சோதனையை துவக்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 8 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் ஏராளமான புதிய ஆற்றலை உட்புகுத்தி உள்ளோம். 2ஜி சகாப்தம், கொள்கை முடக்கம், ஊழல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது. 3ஜியில் இருந்து 4ஜிக்கு வேகமாக முன்னேறியுள்ளது. தற்போது 5ஜிக்கு மாறியுள்ளது.
இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 450 பில்லியன் டாலர் அளவிற்கு 5ஜி தொழில்நுட்பம் பங்காற்றும். 5ஜி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம். இது இணைய வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்ல, வளர்ச்சியின் வேகத்தையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் நம்மால் 6ஜி சேவையை துவங்க முடியும். 6ஜி தொழில்நுட்ப சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பேசினார்.