திரிபுரா, நாகலாந்தில் பாஜக கூட்டணி முன்னிலை ; மேகாலயாவில் இழுபறி..? 3 மாநில தேர்தல் அப்டேட்ஸ்!!
Author: Babu Lakshmanan2 March 2023, 9:29 am
3 மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வரும் நிலையில், திரிபுரா, நாகலாந்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுராவில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல, பிப்ரவரி 27ம் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
3 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 30 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக – திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 39 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. நாகலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி 49க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 22க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 9 இடங்களிலும், பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்படும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.