அரசியல் பிரமுகர்கள் கொலையால் அதிரும் கேரளா…RSS பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் கைது…தொடரும் தீவிர விசாரணை..!!
Author: Rajesh23 April 2022, 10:11 am
கேரளா: பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலக்காடு மாவட்டத்தில் சமீப காலமாக அரசியல் கொலைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 15ம் தேதி கொழிஞ்சாம்பாறை அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரமுகர் சுபைர் மர்ம நபர்களால் அவரது தந்தை கண்முன்னே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அதற்கு அடுத்த நாளே, பாலக்காடு நகரில் கடைக்குள் வேலை செய்து கொண்டு இருந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சீனிவாசனை, உள்ளே புகுந்து மர்ம நபர்கள் வெட்டிக்கொன்றனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் உருவானது.

மேலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சீனிவாசன் கொலை வழக்கில், ஏ.டி.ஜி.பி. விஜய் சாகர் தலைமையிலான போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவில், அந்த வழக்கு தொடர்பாக பாலக்காடு பகுதியை சேர்ந்த முகமது நிசார், ரியாசுதீன், முகமது, சகத் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களை பாலக்காடு தெற்கு போலீஸ் நிலையத்தில் வைத்து, தீவிர விசாரணை நடத்தினர். அதில் கொலை வழக்கில் மொத்தம் 12 பேருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதனால் மற்றவர்களை போலீசார் தொடர்ந்து வலைவீசி தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று ஏ.டி.ஜி.பி. விஜய் சாகர் தெரிவித்து உள்ளார்.