ஒரே நேரத்தில் 5 ரியாக்டர்கள் வெடித்து விபத்து : ரசாயன தொழிற்சாலையில் இருந்து சிதறி ஓடிய தொழிலாளர்கள்… தீயணைப்பு வீரர்கள் திணறல்!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2022, 1:05 pm
இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் ஐந்து ரியாக்டர்கள் ஒரே நேரத்தில் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
ஹைதராபாத் அருகே ஜிடிமெட்லா பகுதியில் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் உள்ளது. அங்கு ஏராளமான அளவில் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஸ்ரீதர் பயோடெக் என்ற பெயரில் செயல்படும் ரசாயன தொழிற்சாலையில் சற்று நேரத்திற்கு முன் திடீரென்று ஒரே நேரத்தில் ஐந்து ரியாக்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக அவற்றிலிருந்து வெளியான ரசாயனங்கள் தீப்பற்றி எரிய துவங்கி தொழிற்சாலையில் உள்ளே பெரும் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை அடர்த்தியாக வெளியேறி வருகிறது.
இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியில் இருந்த மூன்று பேர் படுகாயத்துடன் உள்ளே இருந்து ஓடி வந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து பற்றிய தகவல் அறிந்த ஜிடிமிட்லா தீயணைப்பு படையினர் மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சாதாரணமாக ஏற்படும் தீ விபத்திற்கும் ரசாயனங்கள் பற்றி எறிவதால் ஏற்படும் தீ விபத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. ரசாயனங்கள் தீப்பற்றி எறிவதன் மூலம் வெளியாகும் கரும்புகை மீட்பு பணி மற்றும் தீயணைப்பு பணி ஆகியவற்றில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே இந்த விபத்திலும் தொழிற்சாலைக்குள் சென்று அங்கு உள்ள நிலைமையை கணிக்க இயலாத சூழ்நிலையில் தீயணைப்பு படையினர் உள்ளனர். எனவே கவச உடையணிந்த மீட்பு குழுவினரை அங்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்ற வருகின்றன.