5 மாநில தேர்தல் படுதோல்வி : இது நல்ல பாடம்… தைரியம் மற்றும் புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிப்போம் : காங்கிரஸ்!!!

Author: Babu Lakshmanan
10 March 2022, 4:40 pm

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பல்வேறு கட்டங்களாக நடந்த உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த 7ம் தேதி முடிவடைந்தது. இதில், பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்த 5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப், அக்கட்சியின் கையை விட்டு நழுவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸின் இந்தப் படுதோல்விக்கு, அக்கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்களே காரணம் என்பதே உண்மை.

அதுமட்டுமில்லாமல், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதேபோல, மணிப்பூரில் வெறும் 4 இடங்களிலும், உத்தரகாண்ட்டில் 18 தொகுதிகளிலும், கோவாவில் 12 இடங்களிலும் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இது அக்கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படுதோல்வி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியதாவது :- 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இதில் பாடம் கற்றுக் கொள்வதுடன், இந்திய மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். தேர்தல் வெற்றி பெற்ற அனைவருக்கு வாழ்த்துக்கள், என தெரிவித்தார்.

இதேபோல, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், ” மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எங்களது யுத்தம் தற்போதுதான் தொடங்கியுள்ளது. தைரியம் மற்றும் புதிய ஆற்றலுடன் தொடர்ந்து பயணிப்போம்!,” என்றார்.

பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. அதேவேளையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 19 ஆக உயர்ந்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 2558

    0

    1