திருச்சூரில் காட்டுயானை தாக்கி 5 வயது சிறுமி பரிதாப பலி: பாட்டியின் இறுதிச்சடங்கிற்கு சென்றபோது சோகம்..!!
Author: Rajesh8 February 2022, 5:45 pm
திருச்சூர்: திருச்சூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே புத்தன்சிறாவை சேர்ந்தவர் நிகில். நிகிலின் தாயார் இறந்து அவரது ஈமச்சடங்குகள் ஆதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி அருகே உள்ள ஒரு கோவிலில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள நிகில் குடும்பத்தினருடன் அவரது 5 வயது மகள் அக்னிமியாவுடன் சென்றுள்ளார். இவர்களுடன் நிகிலின் தந்தை ஜெயனும் இருந்தார். மூவரும் நீர்வீழ்ச்சியை அடுத்துள்ள காட்டுபகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது கோவிலுக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் இருந்து திடீரென யானை ஒன்று வந்தது. அதனை கண்டதும் மூவரும் அங்கிருந்து தப்பியோடினர். ஆனால் யானை சிறுமி அக்னிமியாவை பலமாக தாக்கியதில் மிதிப்பட்டு சிறுமி அக்னிமியா பரிதாபமாக இறந்தார்.
அவரை காப்பாற்ற சென்ற சிறுமியின் தந்தை நிகிலும், தாத்தா ஜெயனும் படுகாயம் அடைந்தனர். இதற்குள் சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் யானையை காட்டுக்குள் விரட்டினர். பின்னர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிகில், ஜெயன் இருவரையும் சாலக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து போலீசாரும், வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.